மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது சிவசேனா தலைமையில் மகா அகாதி கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், முன்னதாக, பாஜக, சிவசேனா கூட்டணி சார்பாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை மாநில முதல்வராக முயற்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிதின்கட்கரியை முதல்வராக ஆர்எஸ்எஸ், சிவசேனாவுடன் இணைந்து செயல்பட்டு வந்ததாகவும், ஆனால், பாஜக தலைமை அதை ஏற்க மறுத்து விட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிரிவில், பாஜக, சிவசேனா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், சிவசேனாவின் அதிகாரப் பகிர்வு குறித்த பிடிவாதம் காரணமாக, இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது.
சுமார் 1 மாத கால இடைவெளிக்கு பிறகு, அங்கு சிவசேனா தலைமையில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
இந்த நிலையில், பாஜக, சிவசேனா இடையே நடைபெற்று வந்த மோதலின்போது, மத்திய அமைச்சர் நிதின் கட்சிரையை முதல்வராக ஆர்எஸ்எஸ் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே பட்னாவிஸ் தலைமைமீது அதிருப்தி கொண்ட சிவசேனா, ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்க, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலையிட வேண்டும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் ஆலோசகர் கிஷோர் திவாரி விருப்பம் தெரிவித்து இருந்தார்.
இதற்கு காரணமாக நிதின் கட்கர, கூட்டணி பிரச்னையை 2 மணி நேரத்தில் தீர்ப்பார் என்றும், இரு கட்சிகள் இடையே தற்போது காணப்படும் நிலைமை, பட்னாவிசின் பேச்சு ஆகியவற்றை பார்க்கும் போது, மூத்த அரசியல்வாதியான நிதின் கட்கரி பொருத்தமாக இருப்பார் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், கிஷோர் திவாரி கருத்து பற்றி ஆர்எஸ்எஸ் தலைமையின் பதில் வெளிவராத நிலையில், அதன் நாளிதழான தருண் பாரத்தில், அவரை பொய்யர், கோமாளி என விமர்சித்து எழுதியது.
இதற்கிடையில் சிவசேனா தரப்பில் இருந்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு கடிதம் எழுதியதாகவும், பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரியை களம் இறக்கி தீர்வு காண வேண்டும். சிவசேனாவுடன் வந்து பேச வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து வெளிவரும் பிரபல இந்தி நாளிதழான அமர்உஜாலா, மகாராஷ்டிராவில் நிலவி வந்த அரசியல் குழப்பத்தின்போது, நிதின்கட்கரியை மாநில முதல்வராக சிவசேனாவும், ஆர்எஸ்எஸ்-சும் முயற்சி செய்தது உண்மை என்றும், நிதின்கட்கரி முதல்வராக சிவசேனா ஒத்துக்கொண்டது என்றும் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அவர்கள் பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டாவிடம் ஆலோசனை நடத்தியதாகவும், ஆனால், அவர் அமித்ஷா, மோடி போன்ற மூத்த தலைவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி, நிதின்கட்கரிக்கு வாய்ப்பு வழங்க மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியிட்டு உள்ளது.
இந்த தகவல் பாஜக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிதின்கட்கரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டி ருந்தால் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்திருக்கும் என்று கூறி வருகின்றனர்.