மிரா பயாந்தர், மகாராஷ்டிரா

பா ஜ க வுக்கு ஆதரவாக ஜெயின் சமூக தலைவர் பரப்புரை செய்ததற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்த மிரா பயாந்தர் முனிசிபாலிடி தேர்தலில் பா ஜ க பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது,  சிவசேனாவுக்கு எதிர்பார்த்ததை விட மிக குறைவான இடங்களிலேயே வெற்றி கிடைத்துள்ளது.  இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு ஜெயின் சமூக தலவரான நயாபத்மாசாகர்ஜி மகராஜ் என்பவர் பா ஜ க வுக்கு வாக்கு அளிக்குமாறு வீடியோ மூலம் பரப்புரை நிகழ்த்தினார்.  அந்த வீடியோவில் அவர், மாமிசம் இல்லாத சமுதாயம் அடைய வேண்டுமெனில் பா ஜ க வுக்கு வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் தனது பரப்புரை வீடியோவில் பா ஜ க ஏற்கனவே 2015ல் ஜெயின் பண்டிகைகளின் போது மாமிசக்கடைகள் அடைக்கப்படும் என அறிவித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்   அத்துடன்  இந்த முனிசிபாலிடி தேர்தல் அறிவிப்புக்கு முன்பு இதே ஜெயின் தலைவர் மகாராஷ்டிரா முதல்வரை சந்தித்து சில ஜெயின் பண்டிகை தினத்தன்று மாமிசக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வீடியோவுக்கு சிவ சேனா பாராளுமன்ற உறுப்பினர் அனில் தேசாய் என்னும் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இது தேர்தல் விதிமுறைகளுக்கும்,  உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மதம் மற்றும் ஜாதியின் அடிப்படையில் வாக்கு கேட்கக் கூடாது என்பதற்கும் எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவினால் தான் தாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம் எனவும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாகவும் தேசாய் கூறியுள்ளார்.