நாகர்கோவில்: முப்படை தளபதி பிபின் ராவத் மரணமடைய காரணமாக இருந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்பிய நாகர் கோவிலைச் சேர்ந்த ஷபின் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இளம்பெண் படத்தை போட்டு போலியாக பதிவு செய்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின்ராவத்ர, அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் பலியானார்கள். விபத்து குறித்து விசாரணை நடத்த முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விமானப்படை அதிகாரி ஒருவரை நியமித்துள்ளனர். அதேபோல் தமிழக காவல்துறையில் ஏடிஎஸ்பி அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. விபத்து குறித்து ஆய்வு நடத்த கருப்புப் பெட்டியும் கைப்பற்றப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், இந்த விபத்து குறித்து சமூக இடங்களில் பல்வேறு வதந்திகள் பரவின. இதுதொடர்பாக பிரபல யுடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து விமானப்படையும், வதந்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டு கோள் விடுத்தது. அதைத்தொடர்ந்து தமிழக காவல்துறை, சைபர் க்ரைம், நுண்ணறிவு, உளவுத்துறை போலீஸார் கண்காணிக்கிறார்கள் சமூக வலைதளங்களையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்து வதந்தி பரப்பிய நாகர்கோயிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் தனது டிபியில் ஒரு இளம்பெண்ணின் புகைப்படம் வைத்திருந்தார். மற்றொரு டிபியில் வேறு ஒரு புகைப்படம் வைத்திருந்தார். இந்த போலி டிபிக்கு பின்னால் ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் ‘தீவிரவாதிகள்’ என்று ஒரு சர்ச்சையை கொண்டு வந்ததற்காக தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இவரது பதிவில், சீனா, பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனா இருந்தவர் பிபின் ராவத், முப்படை தளபதி உயர் பாதுகாப்பில் இருப்பவர். இந்த விபத்து பின்னார் பெரிய சதி இருக்குமோ என்று சந்தேகம். கேரள பார்டர் நக்சன் நடமாட்டம் உள்ள பகுதி? என கூறியிருந்தார்.
இவர்மீது வழக்கு பதிவு செய்த நாகர்கோவில் காவல்துறையினர், புதுக்கடை பகுதியை சேர்ந்த ஷிபின் என்பவர் சமூக வலைதளம் அவதூறாகவும், நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு இடையூறாக பதிவிட்டதன் மூலம் அவர் மீது ஐபிசி 153A, 505/1 b, 504 (இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்படுத்த முயற்சித்தல், அவதூறு பரப்புதல் , சமூக வலைதளம் மூலம் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகைகளில் செயல்படுதல், குழுவில் கலகம் ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் ஷிபினை கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைத்தனர்.