டெக்சாஸ்

டெக்சாஸ் மாநிலத்தில் ஷெரின் மாத்யூஸ் என்னும் சிறுமியின் வளர்ப்புத் தாய் சினி கைது செய்யப்பட்டுள்ளார்.

சினி-வெஸ்லி எனும் கேரள தம்பதியினர் அமெரிக்காவில் டெக்சாஸில் வசித்து வருகின்றனர்.   அவர்கள் ஷெரின் என்னும் சிறுமியை பிகாரில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் இருந்து 2016ஆம் வருடம் ஜூலை மாதம் தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர்.  அந்தக் குழந்தையை அடிக்கடி தனியே விட்டு விட்டு இவர்கள் தங்களுக்கு பிறந்த குழந்தையுடன் வெளியே சென்று வருவது வழக்கமாக இருந்திருக்கிறது.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஷெரின் பால் குடிக்க மறுத்ததால் அவளை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்ததாகவும் பின்பு அவர் காணாமல் போனதாகவும் வெஸ்லி தெரிவித்தார்.   அதற்கு சிலநாட்கள் கழித்து அக்டோபர் 22ஆம் தேதி ஒரு பாலத்தின் கீழ் ஷெரின் பிணமாக கிடைத்தாள்.  அதன் பிறகு வெஸ்லி பால் குடிக்கும் போது ஷெரின் மூச்சுத் திணறி இறந்து விட்டதாகவும் பயத்தில் அவளுடைய சடலத்தை வீட்டில் இருந்து கொண்டு போய் பாலத்தின் கீழ் மறைத்தாகவும் ஒப்புக் கொண்டார்.

விசாரணையின் போது வெஸ்லி தாங்கள் தங்களுக்குப் பிறந்த குழந்தையை மட்டும் அழைத்துக் கொண்டு அடிக்கடி வெளியே செல்வது வழக்கம் எனவும், ஷெரின் காணாமல் போனதற்கு முதல் நாள் கூட அப்படி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.   இவர்களுக்கு பிறந்த குழந்தை ஷெரின் காணாமல் போனதையொட்டி போலீசார் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் வைத்துள்ளனர்.   சினி குழந்தையை தன் பொறுப்பில் விடுமாறு நீதிமன்றத்தில் முறையிட வந்த போது போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கைதுக்கும் ஷெரின் மரணத்துக்கும் சம்மந்தம் இல்லை எனவும் அவர் தனது வளர்ப்பு மகளை வீட்டில் தனியே விட்டுச் சென்ற குற்றத்துகாக கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  வெஸ்லி இன்னமும் போலீஸ் காவலில் இருந்து வருகிறார்.