
லண்டன்
நவாஸ் ஷெரிஃப் மீது பாக் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட தகவலினால் பாக் முன்னாள் பிரதமர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது லஞ்ச வழக்கு போடப்பட்டது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நீதி மன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு ஷெரிஃப் பதவி இழந்தார். ஆயினும் இன்னும் அவருடைய கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆட்சி புரிந்து வருகிறது. தற்போது ஷெரிஃப் லண்டனில் தனது உடல்நலம் குன்றிய மனைவியை கவனித்துக் கொண்டு இருக்கிறார்.
நவாஸ் ஷெரிஃப் வழக்கில் ஆஜராகததால் அவர் மீது நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஆளும் கட்சியின் தலைவராக இன்னும் ஷெரிஃப் பதவி வகித்து வந்தாலும் கட்சியினுள் அவரை எதிர்த்து புரட்சி கிளம்பி வருகிறது. இதற்கு முன்பு ராணுவப் புரட்சியால் இருமுறை பதவி இழந்த ஷெரிஃப் தற்போது ஊழல் குற்றச்சாட்டை முன்னிட்டு பதவி இழந்துள்ளார். ஆனால் இதற்கான தாக்கம் அவரது கட்சியில் இல்லாமல் இருந்தது.
தற்போது அவரது கட்சியின் உள்ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதாலும், அவர் நாட்டுக்கு திரும்பி வந்தால் கைது செய்யப்படுவார் என்பதாலும் ஷெரிஃப் பாகிஸ்தான் திரும்ப தயக்கம் காட்டி வருகிறார். மேலும் அவரது கட்சிப் பூசல் ஓயும் வரை அவர் பாகிஸ்தான் திரும்புவது சந்தேகமே என அவருடைய கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு நவாஸ் ஷெரிஃப் மகள் மரியம் நவாஸ் அளித்த பேட்டியில் தனது குடும்பத்தினர் தன்னை கட்சித் தலைவராக பொறுப்பேற்கச் சொல்வதாகவும் ஆனால் தனக்கு அதில் விருப்பம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். அத்துடன் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் “பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைமைப் பதவியை நான் விரும்பவில்லை. இறைவனும், நவாஸ் ஷெரிஃபும் இணைந்து கட்சியை நடத்துவர். நான் கட்சியில் ஒரு தொண்டன் மட்டுமே” என பதிந்திருந்தார்.
மேலும், மகளைக் கட்சிப் பதவிக்கு கொண்டு வந்து கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குளேயே வைத்திருக்க நவாஸ் ஷெரிஃப் சதி செய்வதாக ஷெரிஃப் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மரியம் நவாஸுக்கு கட்சிப் பதவி கொடுக்கவோ, நவாஸ் ஷெரிஃபுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தால் கட்சித் தலைமை யாருக்கு என்பதைப் பற்றியோ இது வரை கட்சி எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என கட்சிப் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]