பாட்னா

ஞ்சாப் நேஷனல் வங்கி ஊழலில் வங்கியின் கடைநிலை உதவியாளரைத் தவிர மற்ற அனைவர் மீதும் மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளதாக சத்ருகன் சின்ஹா கூறி உள்ளார்.

பாஜக வின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பாலிவுட் கதாநாயகனுமான சத்ருகன் சின்ஹா மோடியையும் அவர் அரசையும் கடுமையாக விசாரித்து வருவது தெரிந்ததே.    அவர் கூறும் கருத்துக்கள் அனைத்துமே அரசியல் உலகில் பரபரப்பை உண்டாக்கி வருகிறது.    பணமதிப்பிழப்பு, ஜி எஸ் டி போன்ற அனைத்து நடவடிக்கைகளிலும் மோடி அரசை கடுமையாக சத்ருகன் குறை கூறி உள்ளார்.

தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி மோசடி நடைபெற்றது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, “வங்கியின் ஒவ்வொரு கணக்கும் தணிக்கை செய்யப்படுகிறது.  எனவே இந்த ஊழலை கவனிக்காதது வங்கியி அதிகாரிகள்,  தணிக்கையாளர்கள்,  மேலாளர்கள் ஆகியோரின் குற்றமே ஆகும்.  அவர்கள் இதை உன்னிப்பாக கவனிக்கவில்லை”  எனக் கூறி இருந்தார்.

அதற்கு சத்ருகன் சின்ஹா, “ஒரு துறையின் தலவர் என்றால் பூங்கொத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும்.   கல்லடியையும் வாங்கிக் கொள்ள வேண்டும்.   மோடி அரசு எல்லாவற்றுக்கும் நேருவின் காலத்தில் இருந்து காங்கிரசின் ஆட்சியை குற்றம் சொல்வது போல வங்கி அதிகாரிகளையும் தணிக்கையாளர்களையும் இந்த ஊழலுக்காக குறை கூறுகிறது.   நல்லவேளை,  அவர்கள் கடைநிலை ஊழியரை இன்னும் குற்றம் கூறவில்லை”  என தனது டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

மேலும், “பஞ்சாப் நேஷனல் வங்கியின் உண்மையான உரிமையாளர்கள் அரசாங்கம் தான்,   கடந்த ஆறு வருடங்களாக இது குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு அரசுகளுமே எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?  தேவைஇன்றி மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்தி விட்டு அரசு எங்கு குற்றம் நிகழ்ந்துள்ளது என கண்டுபிடித்து ஆவன செய்ய வேண்டும்.    அப்படி செய்வதே உங்கள் தலைமைக்கு அழகு”  என தெரிவித்துள்ளார்.