டில்லி
பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் மோடி, ஸ்மிருதி இரானி, அமிதாப் பச்சன் போன்றோர் ஏன் எதுவும் கூறவில்லை என் சத்ருகன் சின்ஹா கேட்டுள்ளார்.
பத்மாவதி இந்தித் திரைப்படத்தில் சித்தூர் ராணி பத்மினியை தவறாக சித்தரித்தாக கூறி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. திரைப்படம் வெளியிடும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு சில மாநிலங்கள் வெளியிட தடை பிறப்பித்துள்ளது. இந்தப் படத்தில் நடித்த தீபிகா படுகோனே மற்றும் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டுள்ளன.
இதுவரை பாலிவுட் நட்சத்திரங்கள் யாரும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தற்போது முன்னாள் பாலிவுட் நடிகரும் பா ஜ கவின் பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா தனது கருத்தை வெளியிட்டுள்ளார். “பத்மாவதி திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. கிட்டத்தட்ட நெருப்பு போல பற்றி எரிகிறது. ஆனால் நம்முடைய பிரதமர், தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர், பாலிவுட் திரையுலகப் பிரமுகர்கள் ஏன் இன்னும் அமைதியாக உள்ளனர்?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் இதே கருத்தை அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். அதில், “பத்மாவதி விவகாரம் எரிந்துக் கொண்டிருக்கும் போது பாலிவுட் பிதாமகன் அமிதாப் பச்சன், பன்முகம் கொண்ட அமீர்கான், பிரபல நட்சத்திரம் ஷாருக்கான் ஆகியோர் என்ன் கருத்து கூறவில்லை. தகவல் ஒளிபரப்பு அமைச்சரோ, மதிப்பிற்குரிய பிரதமரோ கூட வாய் திறக்காதது ஏன்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.