டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ப.சிதம்பரத் தின் மகன் கார்த்தி சிதம்பரம், மூத்த காங்கிரஸ் தலைவர் சசிதரூர் உள்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டாக கட்சி தலைமைக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளனர். அதில், காங். தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த மாதம் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தேசியத் தலைவர் பதவி குறித்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
தலைமை பதவிக்கு தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி மறுத்து விட்ட நிலையில், பிரியங்கா காந்தி அல்லது ராகுல்தான் போட்டியிட வேண்டும் ஒரு தரப்பினரும், காந்தி குடும்பம் அல்லாத ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என மற்றொரு தரப்பினரும் முட்டி மோதி வருகின்றனர். இதற்கிடையில், சோனியா, ராகுல் உள்பட பலரது நன்மதிப்பை பெற்ற ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் தலைமை பதவிக்கு போட்டியிட திட்டமிட்டு உள்ளார். அதுபோல, தலைமை பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாக கேரள எம்.பி. சசி தரூரும் அவ்வப்போது மறைமுகமாக பேசி வருகிறார்.
இந்த நிலையில், “காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை நிலவ வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைமை தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு, சசி தரூர், கார்த்தி சிதம்பரம் உள்பட 5 எம்.பி.,க்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
இதுதொடர்பாக, சசி தரூர், மணிஷ் திவாரி, கார்த்தி சிதம்பரம், பிரத்யுத் பர்தோலி, அப்துல் காலிக் ஆகிய 5 எம்.பி.க்கள் கூட்டாக எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்படுவது அவசியம். அது குறித்து எங்களுக்கு கவலை உள்ளது.
ஆகவே, தேர்தலில் யாரெல்லாம் ஓட்டுப் போடலாம், தகுதி வாய்ந்தவர்கள் யார் என்பது குறித்த வாக்காளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட வேண்டும்.
கட்சியில் வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கைக்கு தவறான விளக்கம் அளிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது.
இந்த பட்டியலை வெளிப்படையாக அறிவித்தால் தான் வேட்பாளர்களுக்கும் தேர்ந்தெடுப்போருக்கும் தெளிவான முடிவு எடுக்க முடியும்.
வேட்பாளர்கள், நாடு முழுவதும் உள்ள 28 பிரதேச காங்கிரஸ கமிட்டிகளுக்கம், 9 யூனியன் பிரதேசங்களுக்கும் சென்ற வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.
கட்சியின் எந்தவொரு, உள் ஆவணமும், அதில் உள்ள தகவல்களை தவறாக பயன்படுத்த விரும்புபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வெளியிடுங்கள் என நாங்கள் ஆலோசனை தரவில்லை.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வதற்கு முன், கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் குழு, பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். பட்டியலை வழங்கினால், தேர்தல் பணியில் இருந்து தன்னிச்சையான செயல்கள் அகற்றப்படும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.
ஏற்கனவே 2020ல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமைப்புரீதியாக மாற்றியமைக்கக் கோரி கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவில் தரூர் மற்றும் திவாரி ஆகியோர் இடம்பெற்றி ருந்தனர். அப்போது, தற்போதைய காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், அதில் குலாம்நபி ஆசாத்,ராகுல்மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துவிட்டு, கட்சியில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில், தற்போது கார்த்தி சிதம்பரம் உள்பட 5 எம்.பி.க்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
ஏற்கனவ கடந்த மாதம், திவாரி மற்றும் சிதம்பரம், தரூருடன் சேர்ந்து, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வாக்காளர் பட்டியலைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அப்போத, அடுத்த கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்காளர்களின் பெயர்களை காங்கிரஸ் பகிரங்கப்படுத்தாததற்கு ஆட்சேபனைகளை எழுப்பிய திவாரி, “இலவச மற்றும் நியாயமான” செயல்முறைக்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) இணையதளத்தில் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரி, கட்சி தலைவர் தேர்தல் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வருவதாகவும், முழுத் தேர்தல் செயல்முறையும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறும் என்றவர், கட்சியின் அரசியலமைப்பின் படி வாக்காளர் பட்டியலை பகிரங்கப்படுத்த முடியாது , ஆனால் தேர்தலில் போட்டியிடும் எவருக்கும் அவற்றை வழங்க முடியும் எனவும் அவர் கூறியிருந்தார்.