மும்பை :

ந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவை சந்தித்துள்ளன. கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக சென்செக்ஸ் 642 புள்ளிகளுக்கு சரிந்துள்ளது.

இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்தில் இருந்தே சென்செக்ஸ், இறக்கத்திலேயே வர்த்தமாகி வந்தது. தொடங்கும்போதே சென்செக்ஸ் 200 புள்ளிகளும், நிப்டி 80 புள்ளிகளும் சரிவுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து சரிவுடனேயே இருந்த பங்குச்சந்தைகள், வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 642.22 புள்ளிகள் சரிந்து 36,481.09ஆகவும், நிப்டி 185.90 புள்ளிகள் சரிந்து 10,817.60ஆகவும் நிறைவடைந்தன.

ஏற்கனவே, இந்திய பொருளதாரம் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.  அமெரிக்க – சீனா இடையே நடக்கும் வர்த்தக போர் ஒருபுறமும், நாட்டில் உள்ள ஆட்டோமொபைல், வங்கி, ரியல் எஸ்டேட், நிதி நிறுவனங்கள்  சரிவை சந்தித்து வரும் நிலையில், அது தொடர்பான  துறை சார் பங்குகள் சற்றே அதிக இறக்கத்தில் வர்த்தகமாகி சென்செக்ஸின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. ஆனால்,  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மோடி தலைமையிலான அரசு இந்திய பொருளாதாரத்தையும் பங்குச் சந்தையையும் தூக்கி நிறுத்தப் போவதாக சவடால் விட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், சவூதி அரேபியா எண்ணை ஆலை தாக்கப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் சப்ளை குறைந்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சுமார் 20 சதவிகிதம் வரை உயர்ந்து இருப்பது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் எழுபத்திரண்டு ரூபாயை நோக்கி வர்த்தகமாகிக் கொண்டிருப்பது போன்றவைகள் இந்திய சந்தையை நேரடியாக பாதித்து உள்ளது.

இந்த நிலையில், இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகத்தில் 858 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1641 நிறுவன பங்குகள் சரிந்தும், 143 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.