சிவசேனாவுக்கு ஆதரவு தருமா காங்கிரஸ் ?: சோனியாவை இன்று சந்திக்கிறார் சரத் பவார்

Must read

மஹாராஷ்டிராவில் சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ள நிலையில், அக்கட்சிக்கு ஆதரவு தருவதா ? வேண்டாமா ? என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் வென்றன. இருகட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டும், ஆட்சியில் சரிபங்கு மற்றும் இரண்டரை ஆண்டு கால சுழற்சி முறையிலான ஆட்சி என சிவசேனா வைத்த இரு கோரிக்கையையும் பாஜக ஏற்காததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதனால் பெரும்பான்மைக்க தேவையான 145 இடங்களை தனித்து பெற முடியாத பாஜக, ஆளுநர் அழைப்பு விடுத்தும் ஆட்சியமைக்க விரும்பவில்லை என பாஜக அறிவித்துவிட்டது. பாஜகவின் அறிவிப்பை தொடர்ந்து, இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு ஆட்சியமைக்க மஹாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே, அக்கட்சி ஆட்சியமைப்பது சாத்தியமாகும். சிவசேனாவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு தர, பாஜக கூட்டணியில் இருந்து அக்கட்சி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் ஏற்கனவே நிபந்தனை விதித்துள்ளது.

இந்நிலையில் சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளது தொடர்பாக ஆலோசிக்கவும், அக்கட்சிக்கு தங்களின் கூட்டணி ஆதரவு அளிப்பதா ? வேண்டாமா ? என்பது குறித்து முடிவெடுக்கவும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று சந்தித்து பேச உள்ளார். இருவரின் ஆலோசனைக்கு பின் எடுக்கப்படும் முடிவு தான் யார் ஆட்சியமைப்பது ? என்கிற கேள்விக்கு விடையளிக்கும் என்பதால், இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

More articles

Latest article