பீட்
மோடி முஸ்லிம்களை வெளிப்படையாக தாக்கிப்பேசுவதாக சரத்பவார் குற்றம் சாட்டி உள்ளார்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் நந்துர்பரில் பேசுகையில், தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அழிவதற்கு பதில் அஜித்பவாருடன் சரத்பவார் இணையவேண்டும் என்று கூறியிருந்தார். உடனடியாக இதற்கு பதிலடியாக சரத்பவார், “நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன்” என்றார்.
நேற்று பீட்டில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சரத்பவார்,
”பிரதமர் மோடியால் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் அவர் மற்றவர்களுக்கு எதிராக எதை வேண்டுமானாலும் பேசுகிறார். அவர் சமீப காலமாக வெளிப்படையாக முஸ்லிம்களை தாக்கி பேசுகிறார். பிரதமரான அவர் அனைத்து சாதி மற்றும் மத மக்களுடனும் நிற்க வேண்டும்.
அவர் பேச்சில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வெளிப்படையாக தெரிகிறது. தேர்தலில் பிரதமர் மோடிக்கு உதவக்கூடிய எதையும் மக்கள் செய்யக்கூடாது. பிரதமர் மோடி பெண்களுக்கு எதிரானவர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரானவர். கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் நலனுக்காக அவர் எதுவும் செய்யவில்லை.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளையும் அவரது அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு இருப்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கும், ஆணவத்திற்கும் உதாரணம்”
என்று தெரிவித்துள்ளார்.