புனே: பீமா கோரேகான் கலவர வழக்கை தேசியப் புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான என்ஐஏ விசாரணைக்கு மராட்டிய மாநில அரசு மாற்றியதற்கு, கூட்டணிக் கட்சித் தலைவரான சரத்பவார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பீமா கோரேகான் வன்முறைக்கு காரணமாக கூறப்படும் எல்கர் பரிஷத் மாநாட்டுப் பேச்சு தொடர்பான வழக்கு என்ஐஏ விசாரணை அமைப்பிற்கு மாற்றப்பட்டது. முதலில் மாற்ற மறுத்த மராட்டியத்தின் உத்தவ் தாக்கரே அரசு, பின்னர் தனது முடிவிலிருந்து பின்வாங்கி வழக்கை மாற்றியது.
இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழக்க, ஏராளமானோர் காயமடைந்தனர். வழக்கு விசாரணையை மாற்றியதற்கு மாநில உள்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அனில் தேஷ்முக் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் அதிருப்தி தெரிவித்துள்ளார். “பீமா கோரேகான் கலவர வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் நடவடிக்கைகள் ஆட்சேபனைக்குரியதாக உள்ளன. அவர்களின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.
ஒரு நாள் காலை, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை மராட்டிய மாநில அமைச்சர்கள் சந்திக்கின்றனர். ஆனால், அன்று மாலையே வழக்கு என்ஏஐ அமைப்பிற்கு மாற்றப்படுகிறது. அரசியல் சாசனப்படி, இந்த நடவடிக்கை தவறானது. கிரிமினல் வழக்கு விசாரணை, மாநில அரசின் வரம்பிற்கு வருவதால், இதை மத்திய அமைப்புக்கு மாற்றிய மாநில அரசின் முடிவு தவறானது” என்றார்.