1996 ஆம் ஆண்டு “இனிய உதயம்” தமிழ் பத்திரிகையில், நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன், எழுதிய “ஜுகிபா” என்ற கதை வெளியானது.
அதே கதை மீண்டும் ‘தித் திக் தீபிகா’ என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது.
இதன் தொடர்ச்சியாக 2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் “எந்திரன்” திரைப்படம் வெளியானது . அது ’ஜுகிபா’ கதை திருடப்பட்டு எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதை அறிந்த பின் எழுத்தாளர் ஆரூர் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் டைரக்டர் சங்கர் இருவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எந்திரன் கதைத்திருட்டு வழக்கில் ஆஜாராகாமல் வழக்கை இழுத்தடித்து வரும் டைரக்டர் சங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாகப் பிடிவரண்ட் பிறப்பித்திருக்கிறது.
தனக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குநர் ஷங்கர், சரி பார்க்காமல் செய்தி வெளியிடப்படும் போக்கு ஆச்சர்யம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் சாய் குமார் இன்று நீதிமன்றத்தை அணுகி இந்தச் செய்தியை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக எந்த வாரண்ட்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக நீதிபதி உறுதி செய்தார்.
இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுவதில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.
சரி பார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது.
இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய, இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.