இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கொல்கொத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிய்ல் இந்தியா 178 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இவ்வெற்றிக்கு பெரும்பங்காற்றியவர் முகமது ஷமி. இவர் தனது துல்லியமான பந்துவீட்டு மூலம் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்து இரண்டு இன்னிங்சில் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
முகமது ஷமி தன் மகள் பிறந்த சமயத்தில் எடுத்துக்கொண்ட படம்
ஷமியின் அபார பந்துவீச்சுக்காக பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், ஷமி தனது 14 மாதக் குழந்தை அயிரா உடல்நிலை பாதிக்கப்பட்டு ஐ.சி.யூ. வார்டில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலும் அணியின் வெற்றிக்காக விளையாடியது தற்போது தெரியவந்துள்ளது.
அயிராவுக்கு கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மாலை நேரங்களில் மருத்துவமனையில் மகளுடன் கழிப்பதும், காலையில் வந்து போட்டியில் கலந்துகொள்வதுமாக இருந்துள்ளார். 3-ந்தேதி மாலை இந்தியா தனது வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் அயிரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன செய்தியும் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது ஒரே செல்லக்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தபோதும் அணிக்காக விளையாடிய ஷமியை பாராட்டித்தான் ஆகவேண்டும்.