கட்டணம் செலுத்தாமல் அபராதம் மட்டும் செலுத்தி பயணிக்க முடியுமா?

ரவுண்ட்ஸ்பாய்:

போன சனிக்கழமையிலேருந்து பேருந்து பயணிகளுக்கு சனி பிடிச்சிருக்கு. திடீர்னு ராத்திரியோட ராத்திரியா கட்டணத்த உயர்த்திடுத்து “அம்மா – ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ்.” அரசு.

மக்கள் ஆங்காங்கே கட்டண உயர்வை எதிர்த்து  நடத்துநர்களிடம் வாக்குவாதம் செய்யறாங்க.. பல இடங்கள்ல மறியல் போராட்டங்களும் நடந்துக்கிட்டிருக்கு.

இந்த நிலையில, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்னு எல்லா சமூகவலைதளங்களிலும் ஒரு “ஐடியா” ஓடுது.

அதாவது, “சென்னையிலேருந்து நாகர்கோயிலுக்கு டீலக்ஸ் பஸ்ல ரூ. 490 குளிர்சாதன பேருந்துல ரூ. 625 கட்டணமா இருந்துச்சு. கட்டண உயர்வுக்கு அப்புறம் இது முறையே ரூ.778 – ரூ. 1037 ஆயிருச்சு.

அதனால யாரும் டிக்கெட் எடுக்காதீங்க. அப்படி வித்தவுட்ல பயணம் செஞ்சா ரூ. 500தான் அபராதம். அப்படி அபராதத்தைக் கட்டிட்டு பயணம் செய்யுங்க…” – அப்படின்னு பதிவு போடுறாங்க.

அவங்க வேதனைக்கு அப்படி பதிவு போடுறாங்க.. நாமளும் வேதனையோடு சிரிச்சிட்டு நகர்ந்திடுறோம். நானும் அப்படித்தான்.

இந்த நிலையிலதான், ஊர்லேர்ந்து நம்ம மாமா பையன், சேகரு போன் பண்ணான். “மாம்ஸ்.. .. நானும் டிக்கெட் வாங்காம சென்னைக்கு கிளம்பி வர்லாமானு பாக்குறேன்” அப்படின்னான்.

எனக்கு கொழப்பமா போச்சு.

சமூகவலைதளங்கள்ல வர்ற மீம்ஸ்ஸை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிற ஆளுங்க இருக்காங்களானு ஆச்சரியமா போச்சு.

சரி, பேருந்துல டிக்கெட் எடுக்காம பயணம் செஞ்சா, எப்படி நடவடிக்கை எடுப்பாங்கன்னு தெரிஞ்சுக்கலாமேனு நினைச்சேன். ( நான் பயந்த புள்ள.. இதுவரைக்கும் வித் அவுட்ல வந்ததே இல்லே!)

நம்ம் அண்ணனோட நண்பர் தனபால்,  போக்குவரத்துக்கழகத்துல சென்னையில நடத்துநரா இருக்காரு. 6 டி ரூட்ல ஓடுறாரு. அவருக்கு தொடர்ந்து போன் போட்டேன். மனுசன் எடுக்கவே இல்லே.

கோவமா வந்துச்சு. அப்புறம் அவரே லைனுக்கு வந்தாரு.

“ஸாரி ரவுண்ட்ஸு.. டூட்டியில இருக்கிறப்ப நான் செல்போன் எடுக்கவே மாட்டேன். இப்பத்தான் வண்டிலேருந்து இறங்கினேன்.. சொல்லு.. என்ன விசயம்”னு கேட்டாரு.

அட.. தங்கமான மனுசன தப்பா நினைச்சுட்டோமேனு மனசுக்குள்ளேயே அவருகிட்ட ஸாரி கேட்டுட்டு விசயத்தைச் சொன்னேன்.

அதுக்கு அவரு, “வெளியூர் போறப்ப பேருந்து கிளம்பறப்பவே டிக்கெட் போட்டுத்தானே கிளம்புவாங்க. அந்த பேருந்துகள்  கோயம்பேடுல கிளம்பினா தாம்பரம் வரைக்கும் ஸ்டேஜ் உண்டு. அதுக்குள்ள தலைங்கள எண்ணி, டிக்கெட் போட்ருவாங்க.. அப்புறம் எப்படி வித் அவுட்ல போக முடியும்?

இந்த ஐநூறு ரூபா அபராதம் அப்படிங்கிறது நகர – மாநகர பேருந்துகள்லதான் நடக்கும். நூறு பேருக்கு மேல பேருந்துல பயணிங்க இருப்பாங்க. எல்லாரும் டிக்கெட் வாங்கியாச்சான்னு பார்க்கறது கஷ்டம். அதனால வித்அவுட் ஆளுங்க இருப்பாங்க. செக்கிங்ல மாட்டி  அபராதம் கட்டுவாங்க..” அப்படின்னாரு.

நடத்துநர் தனபால் அண்ணன் (ஜாலி மூடில் எடுத்தது)

அடப்பாவமே.. வித்அவுட்ல பயணிக்கிறவங்களால.. நடத்துநருக்கும் சிக்கலா.. புதுசா இருக்கேன்னு நெனச்சுக்கிட்டேன்.

இது பத்தி ராமருங்கிற நம்ம நண்பருகிட்ட சொன்னேன். அவரு,  “நகர – மாநகர பேருந்துகள்ல வித் அவுட்ல மாட்டினா பத்து டிக்கெட் எடுக்கச் சொல்வாங்க. அதான் அபராதம்”னு சொன்னாரு.

சரி இதுபத்தியும் நடத்துநரு தனபால் அண்ணன்ட்ட கேட்கலாமேனு மறுபடி போன் பண்ணேன். எடுக்கவே இல்லை.  டூட்டியில இருக்காரு போலிருக்கு.

வழக்கறிஞர் தாரா அக்கா

அப்புறம் இன்னொரு ஓட்டுநர் அண்ணன்ட்ட போன் போட்டு கேட்டேன். அவரு, “ஐநூறு ரூபா அபராதம் அப்படிங்கிறது மாதிரியே பேருந்து புறப்பட்ட இடத்துலேருந்து வித்அவுட் பயணி பிடிபடற இடம் வரைக்குமான டிக்கெட்டுக்கு  பத்து மடங்கு அபராதம் போடவும் விதி இருக்கு.  அதாவது 15 ரூபா டிக்கெட்னா 150 ரூபாய்க்கு பத்து டிக்கெட்ட கொடுத்திடுவோம்.

ஆனா  வித்அவுட் ஆசாமிங்க  பலபேருகிட்ட பணம் இருக்காது. அதனால் அவங்ககிட்ட இருக்கிற தொகைக்கு.. ஐம்பது அறுபது ரூபாய்கூட அபராதம் போடுறது உண்டு.   எல்லாம் மனிதாபிமானம்தான். ஆனா நான் சொன்னேன்னு யாருகிட்டயும் சொல்லிறாத” அப்படின்னார்.

(அண்ணா.. அதுக்காகத்தான் உங்க பேரை போடலேண்ணா!)

சரி, இந்த 500 ரூபாய் அபராதம்னு யாரு போட்டது.. ஏன் இவ்வளவு குறைஞ்ச அபராதம்னு விதி வச்சிருக்காங்கன்னு மண்டையை குடைஞ்சது.

பிரபல வழக்கறிஞர் தாரா அக்காகிட்ட கேட்டேன். “கொஞ்சம் பொறு ரவுண்ட்ஸு..  ரெஃபர் பண்ணி சொல்றேன்”னு சொன்னாங்க.

அதே மாதிரி மறுபடி போன் பண்ணி சொன்னாங்க..

“1988ம் வருடம் போட்ட மோட்டார் வெகிக்கிள் சட்டம் 178 வது பிரிவின்படிதான், வித் அவுட் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுது.

பயணச்சீட்டு அல்லது இலவச சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்கள் மட்டுமல்ல..  கட்டணம் செலுத்த மறுப்பவர்களையும் பேருந்தில் இருந்து இறக்கிவிடும் உரிமை நடத்துனருக்கு உண்டு.

அதாவது இப்படிப்பட்டவர்களை  மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதி மறுக்கும் உரிமை நடத்துநருக்கு உண்டு.

அதே போல பரிசோதகர் ஸ்டேஜில் சோதனை செய்யும் போது பயணச் சீட்டு மற்றும் இலவசச் சீட்டு இல்லதவர்களை பரிசோதகர் உடனடியாக அந்த பேருந்தில் இருந்து இறக்கிவிடும்  உரிமை உண்டு. அத்துடன் அவரிடம் இருந்து ரூ. 500 வரை அபராதம் வசூலிக்கவும், மேற்கொண்டு பயணம் செய்வதை தடுக்கவும் அதிகாரம் உண்டு” அப்படின்னூ வழக்கறிஞர் தாரா அக்கா சொன்னாங்க.

அதோட, “எத்தனையோ சட்டங்கள் – விதிகள்ல  எத்தனையோ மாறுதல்கள் வந்திருச்சு. ஆனா இந்த அபராத தொகையை மட்டும் 1988ம் வருசத்துக்கு அப்புறம் உயர்த்தலே.. ” அப்படின்னாங்க.

மறுபடி லைனுக்கு வந்தாரு நடத்துநரு தனபால் அண்ணன்.

“ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன் ரவுண்ட்ஸு…    வித்அவுட்ல சிக்கிறவங்களுக்கு மட்டும் தண்டனையோட போகாது. அந்த பேருந்தோட நடத்துநருக்கும் தண்டனை உண்டு. மெமோ கொடுத்துருவாங்க  அதுக்கு fnc  – fare not collected  –  அப்படின்னு பேரு. இந்த மெமோ கொடுத்தா ஆறு மாசத்துக்கு ஓட்டுநருக்கு இன்கிரிமெண்ட் கட் ஆகிடும் ” அப்படின்னாரு நடத்துநரு தனபால் அண்ணன்.

காமெடியா ஒரு மீம்ஸ்ஸ வச்சு விசாரிக்கப்போக.. இத்தனை   இத்தனை மேட்டர் இருக்கானு  ஆச்சரியமா போச்சு எனக்கு.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Shall we travel without ticket in bus just paying fine?, கட்டணம் செலுத்தாமல் அபராதம் செலத்தி பயணிக்க முடியுமா?
-=-