பிரபல திரைப்பட நட்சத்திரமும் ஆர்.கே. நகரில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருமான கங்கை அமரன் பா.ஜ.க.வில் இருந்து விலகியதாக கூறப்படுவதை பத்திரிகை டாட் காம் இதழிடம் மறுத்தார்.
திரைப்பட இயக்குநர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பன்முகத் திறமை கொண்டவர் கங்கை அமரன். கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியின்போது, கங்கை அமரன் குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துக்களை வி.கே. சசிகலா குடும்பத்தினர் மிரட்டிப் பறித்ததாக புகார் எழுந்தது.
சென்னையை அடுத்த பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பையனூர் என்ற இடத்தில் 22 ஏக்கர் பரப்பளவிலான பண்ணை வீட்டைத்தான் சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் மிரட்டி வாங்கியதாக புகார் எழுந்தது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடத்தை மிகச்சில லட்சங்களுக்கு சசிகலா குடும்பம் வாங்கியதாகவும் கூறப்பட்டது.
பிறகு இது குறித்த வழக்கு நடந்தபோது, மிரட்டி வாங்கப்பட்டது உண்மைதான் என்று நீதிமன்றத்தில் கங்கை அமரன் தெரிவித்தார். அதன் பிறகு இந்த விவகாரம் குறித்து எந்தவித பேச்சும் இல்லை.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில் முக்கிய கட்சிகள், தங்கள் வேட்பாளர்களை நிறுத்தின. பா.ஜ.க. வேட்பாளராக கங்கை அமரன் களம் இறக்கப்பட்டார். அ.தி..மு.க. (சசிகலா அணி) சார்பில் சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் போட்டியிட்டார்.
இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜக வேட்பாளர் கங்கை அமரன், சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்து வந்தார்.
“அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் குடும்பத்தினர் என்னை மிரட்டி என் சொத்துக்களை பிடுங்கினார்கள். இது போல பலரையும் மிரட்டி சொத்துக்களை கொள்ளையடித்துள்ளனர். அவர்களால் இந்த சமூகத்துக்கே கேடு” என்று தொடர்ந்து பேசி வந்தார்.
இந்த நிலையில் தற்போது, குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை அ.தி.மு.க.வின் மூன்று அணிகளும் ஆதரிக்கின்றன. எடப்பாடி, ஓ.பி.எஸ். அணிகள் ஆதரித்தது ஒருபக்கம். ஆனால் (சசிகலா) தினகரன் அணியும் பாஜகவை ஆதரித்ததுதான் கங்கை அமரனுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது என்று தகவல்கள் பரவின.
அவர், “இந்த சமூகத்தின் மிகப் பெரிய ஆபத்து சசிகலா – தினகரன் குடும்பத்தினர்தான். நான் உட்பட பலர் அந்த குடும்ப்தாரால் மிரட்டப்பட்டிருக்கிறோம். சொத்துக்களை இழந்திருக்கிறோம். இதையெல்லம் சொல்லித்தான் ஆர்.கே. நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்தோம். அது மக்களிடமும் நன்றாக எடுபட்டது.
இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் சசிகலா அணியினர் அளித்த ஆதரவை பாஜக நிராகரித்திருக்க வேண்டும். அப்போதுதான் தமிழக மக்களிடம் பாஜகவுக்கு மரியாதை ஏற்படும். ஏற்கெனவே அ.தி.மு.க.வின் மூன்று அணிகளையும் மிரட்டி பாஜக, காரியம் சாதித்துக்கொள்கிறது என்று பரவலாக பேசுகிறார்கள். இந்த நிலையில் சசிகலா ஆதரவு பாஜகவுக்கு தேவையில்லை. அவரது ஆதரவு இல்லாமலேயே குடியரசு தலைவர் தேர்தலில் எளிதாக வென்றுவிட முடியும் என்ற நிலையில் எதற்காக சசிகலாவின் ஆதரவு” என்று பா.ஜ.க. தலைவர்களிடம் தனது அதிருப்தியை கங்கை அமரன் தெரிவித்தாக சொல்லப்படுகிறது.
இவரது கருத்து எடுபடவில்லை என்பதால், மனம் வெறுத்து பாஜகவை விட்டு கங்கை அமரன் விலகியதாக தகவல் பரவி வருகிறது.
இதையடுத்து கங்கை அமரனை தொடர்புகொண்டு பத்திரிகை டாட் காம் இதழ் சார்பில் பேசினோம்.
“குடியரசு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வின் சசிகலா அணி பாஜகவுக்கு ஆதரவு அளித்ததை எதிர்த்து, பாஜகவில் இருந்து விலகிவிட்டதாக ஒரு தகவல் உலவுகிறதே ” எனறோம்.
“அப்படி ஏதும் இல்லை. அது தவறான தகவல். பா.ஜ.க. சார்பில் நல்லதொரு வேட்பாளர் குடியரசு தலைவர் பொறுப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரை அனைத்து கட்சியும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இதில் சசிகலா ஆதரித்தால் நான் ஏன் வருத்தப்பட வேண்டும்” என்று கேட்டார் கங்கை அமரன்.
“ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் சசிகலா அணியை கொள்ளையர்கள்.. என் சொத்தையும் கொள்ளையடித்துவிட்டார்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தீர்களே. அப்படிப்பட்டவர்களின் ஆதரவை ஏற்க வேண்டுமா என்றுதான் நீங்கள் வருத்தப்பட்டதாக தகவல்..” என்றோம்.
“தம்பி… அப்போ நான் கடுமையாக விமர்சித்தது உண்மைதான். இப்பவும் அதே கருத்தில்தான் இருக்கேன். ஆனா இப்போ அவங்க ஆதரவு தர்றதை நான் எதிர்க்கலை.
பொத மக்களில் கூட நல்லவங்க, கெட்டவங்க இருக்காங்க. ஒரு நல்ல கட்சிக்கு நல்லவங்க ஓட்டு மட்டும் அல்ல.. கெட்டவங்க ஓட்டும்தான் கிடைக்குது. அப்பத்தான் வின் பண்ண முடியும்.
அதே மாதிரி நல்ல அரசியல்வாதிகள் ஆதரவு மட்டுமே போதும்னு இருக்க முடியாது. அப்படிப் பார்த்தா முக்கால்வாசி அரசியல்வாதிங்க ஆதரவை கேட்கவே முடியாதே. முக்கால்வாசி அரசியல்வாதிங்க மோசமானவங்கதான். பொதுமக்கள் சொத்துக்களை கொள்ளை அடிக்கறவங்கதான். காண்டிராக்ட் எடுத்து ஏமாத்தறவங்கதான். மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளை அடிச்சு பாரின்ல பிள்ளைகளுக்கு பணத்தை போட்டு வைக்கிறவங்கதான்.
அவங்க ஆதரவும் தேவைப்படுதே.. இதுதான் ஜனநாயகம்” என்ற கங்கை அமரன், “அதனால எனக்கு எந்தவித சங்கடமும் இல்லே.. இப்பக்கூட பாஜக ஆபீஸ்தான் போயிட்டிருக்கேன்” என்றார்.
பேட்டி: டி.வி.எஸ். சோமு