மும்பை
நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் அவர் கணவர் ஜேவேத் அக்தர் ஆகியோர் தேச துரோகிகள் என நடிகை கங்கணா ரணாவத் குற்றம் சாட்டி உள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையும் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பெற்ற நடிகையுமான ஷபானா ஆஸ்மியின் தந்தை கைஃபி ஆஸ்மி ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர். இவருடைய நினைவாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துக் கொள்ள நடிகை ஷபானா மற்றும் அவர் கணவர் ஜாவேத் அக்தர் ஆகியோர் ஒப்புக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் காஷ்மீர் புல்வாமா தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அதனால் ஷபானாவும் அவர் கணவரும் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தனர்.
இது குறித்து நடிகை கங்கணா ரணாவத், “நடிகை ஷபானாவும் அவர் கணவர் ஜாவேத் அக்தரும் இந்தியா பாகிஸ்தான் இடையே கலாசார உறவு பரிமாற்றம் தேவை என பேசுகின்றனர். ஆகவே இந்தியாவை துண்டாக்க துடிக்கும் கும்பலில் இவர்களும் இருக்கிறார்கள் எனக் கொள்ளலாம்.
பாகிஸ்தான் கலைஞர்களுக்கு உரியில் நடந்த ராணுவ முகாம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க கராச்சி நிகழ்ச்சிக்கு ஷபானாவும் அக்தரும் கலந்துக் கொள்ள சம்மதம் தெரிவித்த்து தேச விரோத செயலாகும். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு தங்கள் பெயரை காப்பாற்ற பயனத்தை இருவரும் ரத்து செய்துள்ளனர்.
இவ்வாறு நாடகமாடும் தேசத் துரோகிகள் திரை உலகில் அதிகரித்துள்ளனர். இப்போது நமது நாடு ஒரு உறுதியான நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தியா பாகிஸ்தானுக்கு தடை விதித்தால் மட்டும் போதாது. பாகிஸ்தானை நிர்மூலம் ஆக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நடிகை ஷபானா ஆஸ்மி இது குறித்து, “தற்போது புல்வாமாவில் நிகழ்ந்துள்ள கொடூர தாக்குதலால் நமது ஒட்டு மொத்த நாடும் சோகத்தில் ஆழ்ந்துள்ள்து. இந்த சோகத் தருணத்தில் அவர் என்னை கடுமையாக தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளார். கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்” என கூறி உள்ளார்.