சென்னை: பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து, சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில், சட்டம் ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பிரசாரத்தின்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பாவையிட அங்கு சென்றவர், மாவட்ட பெண் எஸ்பியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஜடி 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், காவல்துறையில் பணியாற்றும் பெண் எஸ்பிக்கே பாலியல் கொடுமையா? என கோபமடைந்த நிலையில், இதுகுறித்து, சுமோட்டோ வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக நீதிமன்ற விசாரணையின்போது, சிபிசிஐடி சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, நீதிபதி, டிஜிபியை ஏன் இன்னும் பணி நீக்கம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜேஸ்தாஸ் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.