விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு 8ந்தேதி தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு காவல் துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, தன்னை வரவேற்க வந்த மாவட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் அத்துமீறியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான புகாரின்பேரில், ராஜேஸ்தாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த புகாரில் விசாரணை முடிவடைந்து, 400 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவுபடி, டிசம்பருக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதால் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோர் ஆஜராக வில்லை. இதையடுத்து, வருகின்ற 8ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.