தென்காசி: இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்த விசிக பிரமுகர் காசிசிவகுருநாதன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தலைமறைவானார். அவரை தேடும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் பாலியல் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறையினர் கூறி வந்தாலும், பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படாததால், பாலியல் குற்றச்சாட்டுக்களும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில்,  தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக இருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான  காசிசிவகுருநாதன், அந்த பகுதியில் உள்ள  கே.எம்.அச்சம்பட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலும் ஜாதி ரீதியான மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது அந்த பகுதிமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்த இளம்பெண் தென்காசி மாவட்டம்  சேர்ந்தமரம் காவல் நிலையத்தில்  விசிக பிரமுகர் காசிசிவகுருநாதன் புகார் அளித்தார். இதையடுத்து, காசிவிசுவநாதன் மீது,  பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த   சிவகுருநாதன் தற்போது தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர் சென்னையில் முக்கிய பிரமுகர் கஸ்டடியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை வலை வீசி தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளது.

‘பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஒருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம்  மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இந்த வழக்கு நிலைத்து நிற்குமா, அல்லது சமாதானம் பேசி வாபஸ் பெறப்படுமா என்பது குறித்தும் அந்த பகுதி மக்கள் பேசி வருகின்றனர்.