சென்னை: மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பள்ளியான பத்மாசேஷாத்ரி பள்ளியின்  முதல்வர் கீதா கோவிந்தராஜன், நிர்வாகி ஷீலா ராஜேந்திரா ஆகியோர் காவல்நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கே.கே. நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை விவகாரம். அந்த பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்முறை புகாரை எழுப்பியுள்ளனர். அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு வந்த புகார்களைப் பகிர்ந்ததை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதுபோன்ற புகார்கள் பல முறை பள்ளி நிர்வாகத்திடம் கூறியும், சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது  இதை திமுக எம்.பி. கனிமொழி உள்பட பலர், விசாரணை நடத்தும் காவல்துறையை வலியுறுத்தி இருந்தனர்.‘

இதையடுத்து தமிழகஅரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுத்தது.  அதன்படி, ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து, மாணவிகளின் புகார்மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கம் அளிக்க அப்பள்ளியின் நிர்வாகி மற்றும் பிரின்சிபாலுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதையடுத்து,  பத்மாசேஷாத்ரி பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன் மற்றும் பள்ளி நிர்வாகி ஷீலா ராஜேந்திரா  ஆகியோர்  அசோக் நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்கள்.

அங்குள்ள மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு காவல்நிலையத்தில் தி.நகர் துணையர் ஹரிகிரண் விசாரணை நடத்தி வருகிறார்.