நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தூய யோவான் அரசு உதவி பெறும் தனியார்ப் பள்ளியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தல் காரணமாக, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பெண்கள் கல்லுரி பேராசிரியர்கள் இரண்டு பேர், கல்லூரி மாணவியிடம் இரவில் செல்போனில் பேசி, மதுக்குடிக்க அழைத்த சம்பவம் வெளியாகி உள்ளது. இந்த புகாரின்பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான புகார் கொடுத்த மாணவியன் பெற்றோரை மிரட்டி புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு அரசு உதவி பெறும் பள்ளியான தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அப்பள்ளியில் பயின்று வரும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் ஓரினச் சேர்க்கை பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த ராபர்ட் புரூஸ் என்ற நபர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையில், நிரந்தர ஆசிரியராகச் செயல்பட்டு வந்த நெல்சன் என்ற நபரையும் பணி இடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், இதுகுறித்து மாணவர்கள் யாரும் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டாம் என்றும் பிரச்சினையாக்க வேண்டாம் என்றும் பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி வந்ததாக கூறப்பட்டது.
இந்த சம்பவம்பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதுபோல கல்வித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் ஆசிரியர்கள் இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டனர். இதனால், பெற்றோர்கள் தரப்பில் ஆசிரியர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட குழுந்தைகள் நலப் பிரிவு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், ஆசிரியர்கள் நெல்சன், ராபர்ட் ஆகிய இருவர் மீதும் போக்சோ (POCSO Act) சட்டப்பிரிவு 11-இன் கீழ் 3 வருடம் தண்டனை கிடைக்கும் வகையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் விசாரணை முடிந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிபதி உத்தரவின் கீழ் ஆசிரியர்கள் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு, அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் 2 பேர் போன் மூலம் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட மாணவியிடம் 2 பேராசிரியர்களும் விரும்பத்தகாத வகையில் பேசியதோடு மட்டுமல்லாமல் மதுக் குடிக்க அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினார்.