சென்னை: சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகளில் பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, பள்ளிகளில், பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் ‘மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு’ அமைக்கப்படும், மாணவர்களை வெளியே அழைத்து சென்றால் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களிடம் எழுத்து மூலமான ஒப்புதல் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து அரசு செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சார்ந்து பள்ளி நிர்வாகி மற்றும் பள்ளி முதல்வர் மீது காவல்துறையால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 பள்ளிகளுக்கு அரசால் சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டு, பள்ளி நிர்வாகம் சிறப்பு அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் காரணமாக பள்ளி நிர்வாகி, முதல்வர் மற்றும் சார்ந்த ஆசிரியர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் பின்பக்க அட்டையில் 14417, 1098 போன்ற கட்டணயில்லா தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் சார்ந்த விவரங்களை புகார் அளிக்க மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு SSAC (Student safeguarding advisory committee) குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாதம் ஒருமுறை இக்குழு கூடி மாணவிகளுக்கெதிரான புகார் ஏதும் பெறப்படின் அதுசார்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் “மாணவர் மனசு” என்ற புகார்ப் பெட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள SSAC குழு உறுப்பினர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வாயிலாக பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர்களை NSS, NCC, Scout & Guide, JRC போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் காரணமாக பள்ளியை விட்டு வெளியே மாவட்ட அளவிலோ அல்லது மாநில அளவிலோ அழைத்துச் செல்ல நேரிடும்பொழுது ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பெற்றோரிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று அதன் பிறகு மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலரின் முன் அனுமதியின்றி மாணவ, மாணவியரை பள்ளியைவிட்டு வெளியே அழைத்துச் செல்லக்கூடாது.
மாணவ, மாணவியரை வெளியே அழைத்துச் செல்லும் பொழுது 10 மாணவர்களுக்கு ஒரு ஆண் ஆசிரியர் எனவும், 10 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை எனவும் உடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடன் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டக்கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த இயக்குநர்கள் அல்லது இணை இயக்குநர்கள் மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் பொழுது மேற்கண்ட பணிகளை கண்காணித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்பவர்கள் மீது காவல்துறை வாயிலாக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், துறைரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்படுகிறது.
மாணவ மாணவிகள் பாலியல் புகார்கள் குறித்து 14417, 1098 என்ற நம்பர்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்பது உள்பட பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி என்ற பகுதியில் தனியார் பள்ளியில் மாணவிகளை விளையாட்டு போட்டிக்காக அழைத்து சென்ற உடற்கல்வி ஆசிரியர் அவர்களுக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் எதிரொலியாக தற்போது மாணவ மாணவிகளை வெளியே அழைத்துச் செல்லும் முன்பு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் பெற்றோர்களிடம் எழுத்து பூர்வமாக ஒப்புதல் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர்கள் போக்சோவில் கைது! கல்லூரி ஆசிரியர்கள் கைது எப்போது?
மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! திருச்சி அரசு மருத்துவர் கைது…
மது விருந்துக்கு மாணவியை அழைத்த பாளை. சவேரியார் கல்லூரி பேராசிரியர் கைது!
கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: அரசு பள்ளியின் என்சிசி ஆசிரியர் கைது…