சென்னை: தமிழக திரையிலகில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டால், அவர்கள்  5 ஆண்டுகளுக்கு சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்து உள்ளது.

திரையுலகை பொறுத்தவரையும், பாலியல் சீண்டல்கள் கொடிகட்டி பறந்து வருகிறது. இதுதொடர்பான புகார்கள் அரசல்புரசலாக தெரிய வந்த நிலையில், தற்போது கேரளாவில் வெளியாகி உள்ள ஹேமா கமிட்டி அறிக்கை, திரையுலகின் மற்றொரு பக்கத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு திரையுலகம் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் சிலர்,  தமிழ்நாட்டிலும் இதுபோன்ற கமிட்டி அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் கூட்டம் கூட்டப்பட்டு,  ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் தமிழக திரையுலகில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து விவாதித்தது.

 இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,  பாலியல் வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்டவர் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தால்,   புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரிக்கப்பட்டு, புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில் அவர்கள் 5 ஆண்டுகளுக்கு திரைத்துறையில் பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்படுவார்கள். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது தொடங்கி அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் தென்னிந்திய நடிகர் சங்கம் செய்து கொடுக்கும்.

ஏற்கனபே இதுபோன்று  பாதிக்கப்படுபவர்கள்,  தங்கள் புகார்களை அளிக்க தனி தொலைப்பேசி எண்   உள்ளது. தற்போது இமெயிலும் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கமிட்டியிடம் புகார் அளிக்கவும், மீடியாக்களில் பேசுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதுபோல யூட்யூபில் திரைத்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தை அவதூறாக பேசுபவர்கள் மீது சைபர் க்ரைம் பிரிவு போலீஸில் புகார் அளித்தால் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை கமிட்டி தரும் என கூறப்பட்டுள்ளது.