வாஷிங்டன்,

விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் பெணக்ளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து, கல்லூரி பேராசிரியரும், மருத்துவருமான லாரி நாசருக்கு அமெரிக்க நீதி மன்றம் 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி, லாரி நாசருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதியதாகவும், ஆனால் பெரும்பாலான நாடுகள் மரண தண்டனையை எதிர்ப்பதால் இந்த தீர்ப்பை வழங்கியதாகவும் குற்றவாளியிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவில், பெண்கள்  ஜிம்னாஸ்டிக் அணியின் ஆலோசகராகவும்,  மருத்துவராகவும், இருந்தவர் லாரி நாசர். இவர் பிரபலமான  மிச்சிகன் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக  பணியாற்றி வந்தார்.

இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண்கள், வீராங்கனைகள் என நூற்றுக்கும் அதிகமானோரிடம் பாலியல் சேட்டை செய்ததாக ஏராளமான புகார்கள் குவிந்தன. அதையடுத்து, வழக்கை விசாரித்த மிச்சிகன் நீதிமன்றம்,   லாரி நாசருக்கு 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அப்போது தீர்ப்பை வழங்கிய பெண் நீதிபதி ரோஸ்மேரி, குற்றவாளியைப் பார்த்து உனக்கு நான் மரண தண்டனை விதித்து வாரண்டில் கையெழுத்திட்டிருக்கிறேன் என்றார். ஆனால்,  மரண தண்டனைக்கு எதிராக பல்வேறு நாடுகள் குரல் எழுப்பி வரும் நிலையில், 175 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பதாக அவர் அறிவித்தார்.

தீர்ப்பு வெளியானதும் நீதிமன்றத்தில் திரண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.

ஏற்கனவே சிறுவர் பாலியல் அத்துமீறல் தொடர்பான மற்றொரு வழக்கில் நாசருக்கு 60 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.