மும்பை
அரசியல் உலகிலும் திரை உலகிலும் பாலியல் உதவிகள் சகஜமான ஒன்று என பாஜக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பாலிவுட் கதாநாயகனுமான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல பெண் நடன இயக்குனரான சரோஜ் கான், “ திரையுலகில் பெண்களுக்கு பாலியல் சீண்டல் நடப்பது மிகவும் சகஜமான ஒன்றாக உள்ளது. பல நேரங்களில் பெண்கள் பாலியல் உதவிகள் செய்தே முன்னுக்கு வர நேரிட்டுள்ளது ” என தெரிவித்தார். அதை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரேணுகா சௌத்ரி, அரசியலிலும் பல பெண்கள் பாலியலாக உபயோகப்படுத்துவதாக தனது வருத்தத்தை தெரிவித்தார்.
இந்த இருவரின் கருத்துக்கள் திரை உலகிலும் அரசியல் உலகிலும் கடும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் இது குறித்து சத்ருகன் சின்ஹா தனது கருத்தைக் கூறி உள்ளார். இவர் பாலிவுட்டில் வில்லன், கதாநாயகன் என பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த நடிகரும், பாஜகவின் முக்கிய பிரமுகரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவருடைய மகள் சோனாக்ஷி சின்ஹாவும் தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார்.
சத்ருகன் சின்ஹா, “சரோஜ் கான் மற்றும் ரேணுகா சௌத்ரி கூறியது தவறில்லை. பாலியல் உதவிகள் திரை உலகிலும் அரசியல் உலகிலும் கேட்டுப் பெறப்படுகின்றன. இது பழங்காலைத்தில் இருந்தே நடைபெறுகிறது. ‘நீ என்னை சந்தோஷப்படுத்தினால் நான் உன்னை சந்தோஷப் படுத்துவேன்’ என்னும் குறிக்கோளுடன் நடைபெறும் விஷயம் இது.
நான் இவ்வாறு நடப்பதை சரி என சொல்லவில்லை. நான் அத்தகைய உடன்பாட்டுக்கு எப்போதுமே ஒப்புக் கொண்டதில்லை. ஆனால் நம் கண் முன்னே நடப்பதை நாம் இல்லை என சொல்லக் கூடாது. சரோஜ்கான் உண்மையைக் கூறி உள்ளார். திரை உலகில் இது போல் நிறைய ஆண்களும் பெண்களும் அனுசரித்துப் போன பிறகே வெற்றியை சந்தித்துள்ளனர் என்பது உண்மையாகும்.
சரோஜ்கான் இந்த திரையுலகில் வெகு நாட்களாக பணி புரிபவர். அவர் நடன இயக்கத்தால் பல நடிகைகள் புகழ் பெற்றுள்ளனர். ரேகா, மாதுரி தீட்சித் அவ்வளவு ஏன் சமீபத்தில் மறைந்த ஸ்ரீதேவி உட்பட பலரின் நடனத் திறமையை வெளிக் கொணர்ந்தவர் சரோஜ் கான் ஆவார். மேலும் அவருக்கே கூட இது போல அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அந்த துயரத்தையும் சொல்லி இருக்கவும் வாய்ப்புண்டு” எனத் தெரிவித்துள்ளார்.