சென்னை:  தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக,  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறையின்  கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. ஏற்கவே பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று  காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. நாளையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைகிறது.

இந்த நிலையில், இன்று கருணாநிதி பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக பேரவையில் அமைச்சர் சட்ட முன்வடிவு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து விதி 110ன் கீழ் முதல்வர் அரசு ஊழியர்களுக்காகன பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில் பேரவையில், காவல்துறை கொள்கை விளக்க குறிப்பி தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி,  தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளை காட்டிலும் 2024-ம் ஆண்டில் குறைந்து உள்ளது.

2022-ல் ஆயிரத்து 597 கொலைகளும், 2023-ல் ஆயிரத்து 958 கொலைகளும் நடந்துள்ள நிலையில், கடந்த 2024-ம் ஆண்டில் ஆயிரத்து 488ஆக குறைந்துள்ளது.

குடும்பத் தகராறிலேயே அதிக கொலைகள் நடந்துள்ளன.

அதேவேளையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றசம்பவங்கள் அதிகரித்துள்ளது.

கடந்த 2023ல் 3 ஆயிரத்து 84 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், 2024-ல் 3 ஆயிரத்து 243ஆக அதிகரித்துள்ளது. இதில், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தொடர்பாக மட்டும் ஆயிரத்து 885 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2023-ல் 406ஆக பதிவாகிய நிலையில், 2024-ல் 471ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், முந்தைய ஆண்டுகளை காட்டிலும், கடந்த 2024-ம் ஆண்டில் அதிகரித்தே காணப்பட்டு  உள்ளது.

2022-ல் 4 ஆயிரத்து 968 போக்சோ வழக்குகளும், 2023-ல் 4 ஆயிரத்து 581 போக்சோ வழக்குகளும் பதிவாகியிருந்தன. கடந்த 2024-ம் ஆண்டில், 6 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது,

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.