வாஷிங்டன்:
இந்தியாவுக்கு பயணம் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு தன் நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டி அறிக்கையை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
இதில் இந்தியாவை இரண்டாம் நிலை பயண நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா வைத்திருக்கிறது. அதாவது, இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், அங்கு செல்லும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், காஷ்மீருக்கும், இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கும் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை, மூன்றாம் நிலை நாடுகள் பட்டியலில் வைத்துள்ள அமெரிக்கா, அங்கு பயணம் மேற்கொள்வது குறித்து மறுபரிசீலனை செய்வது அவசியம் என்று தெரிவித்துள்ளது.
நான்காம் நிலையில் உள்ள ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.