சென்னை: என்சிசி முகாமில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  தனியார் பள்ளிகள் அரசு அனுமதியின்றி முகாம்கள் நடத்த தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே செயல்பட்டு வரும் பிரபல கிறிஸ்தவ பள்ளியான கிங்ஸ்லி  கார்டன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சமீபத்தில் என்.சி.சி., முகாம் நடந்தது. இதில், 17 மாணவியர் தங்கி பயிற்சி பெற்றனர். கடந்த 8ம் தேதி இரவு அனைத்து மாணவியரும் ஆடிட்டோரியத்தில் துாங்கினர்.  நள்ளிரவு நேரத்தில், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த என்.சி.சி., பயிற்சியாளர் சிவராமன், 12 வயதான எட்டாம் வகுப்பு மாணவியை எழுப்பி வெளியே அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில், மேலும், 12  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. 

முன்னதாக  பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் முதல்வர் சதீஷ்குமாரிடம் தகவல் தெரிவித்தார். அவர் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.  இந்த நிலையில் கடந்த ஆக. 16ம்தேதி இரவு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாயாரிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரது தாயார் மாணவியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தொடர்ந்து, அந்த சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யகலா விசாரணை தொடங்கினார்.

விசாணையில், என்சிசி பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஐஜி உமா, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.  பள்ளி முதல்வர்   சதீஷ்குமார், பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிபர், பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லி, பயிற்சியாளர்கள் சக்திவேல், சிந்து, சத்யா, சுப்பிரமணி ஆகிய 7 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். கைதான சுப்பிரமணி முன்னாள் சிஆர்பிஎப் வீரர் ஆவார். 

மேலும், தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான சிவராமன், சுதாகர் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், சிவராமனை கோவையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் என்சிசி பயிற்சியாளர் சிவராமன் நாம் தமிழர் கட்சி முன்னாள் இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர். 

மேலும், என்சிசி பிரிவே இல்லாத தனியார் பள்ளியில் சிவராமன் போலியாக என்சிசி முகாம் நடத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட போலி என்சிசி மாஸ்டர் சிவராமனிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒய்வு பெற்ற சிஆர்பிஎப் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியை என்சிசி கமாண்டர் என கூறி நம்ப வைத்ததாக கூறப்படுகிறது.

சிவராமன் இதே போன்று சூலகிரி பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளிலும் போலி என்சிசி கேம்ப் நடத்தியது அம்பலமாகியிருக்கிறது. அந்த பள்ளிகளில் எடுக்கப்பட்ட என்சிசி கேம்ப் போட்டோக்களை காட்டி, இந்த பள்ளியிலும் சிவராமன் என்சிசி முகாமை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த விசாரணை விவரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு செய்தியாளர்களிடம் கூறும்போது, ” தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. புகார் வந்ததும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த புகாரை மறைக்க முயன்ற நபர்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம். போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்றுவரை 9 பேர் கைதாகினர். இன்று முக்கிய குற்றவாளி (சிவராமன்) உட்பட 3 பேர் கைதாகி உள்ளனர்.

இவர்கள் போலியான சான்றிதழ் கொண்டு NCC முகாம்கள் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் எந்தெந்த பள்ளிகளில் முகாம்கள் நடத்தி உள்ளனர் என விசாரணை செய்து வருகிறோம். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் அந்த போலி NCC நபர்களைப் பின்புலம் பரிசோதிக்காமல் முகாம் நடத்த அனுமதித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையால் கூறப்பட்டுள்ள எந்த விதிகளையும் பள்ளி நிர்வாகம் முறையாகப் பின்பற்றவில்லை.

இதே முகாமில் கலந்து கொண்ட மற்ற மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடமும் நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். இம்மாதிரியான சம்பவங்கள் நேர்ந்தால் உடனடியாக அரசு உதவி எண் 1098 என்ற எண்ணை உடனடியாக அழைக்க வேண்டும்.”

இந்த முகாம் குறித்து NCC  அமைப்பது விளக்கம் அளித்துள்ளது. அதில்,  பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாகக் கூறப்படும் பள்ளியில் NCC சார்பாக எந்த முகாமும் நடைபெறவில்லை என்று NCC தலைமை தற்போது விளக்கம் அளித்துள்ளது. குறிப்பிட்ட நாளில் எந்தவித NCC முகாமும் கிருஷ்ணகிரியில் நடைபெறவில்லை. இந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கும் NCCக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று NCC தலைமை விளக்கம் அளித்துள்ளது.

இதையடுத்து தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  அரசின் அனுமதியின்றி முகாம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: தனியார் பள்ளிகளில் அனுமதி பெறாமல் என்சிசி உள்ளிட்ட முகாம்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் சுயநிதிப் பள்ளிகளில் என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட்  மற்றும் ஜேஆர்சி போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன.

அந்த அமைப்புகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். முறையாக பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது. மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமாகவும், மாணவிகளுக்கு பெண் ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் வழங்க வேண்டும். அனுமதி இல்லாமல் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனியார் பள்ளிகள்  இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.