கொரோனாவால் பாதிக்கப்படாத தனி மனிதர் யாருமே இல்லை என்ற போதிலும், இந்த நெருக்கடியான சூழலில், கை தூக்கி பிடிக்க ஆளில்லாத இரண்டு ஜென்மங்கள், திருநங்கைகளும், விலைமாதர்களும் தான்.
அவர்களுக்கு உதவ மே.வங்க முதல் –அமைச்சர் மம்தா பானர்ஜி முன் வந்துள்ளார்.
சமூகத்தில் திருநங்கைகளுக்கு நியாயமான உரிமைகளை வழங்கும் வகையில் அவர்களுக்கு குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டுகள்) வழங்க மம்தா பானர்ஜி உத்தர விட்டுள்ளார்.
அந்த மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளதால் மாநிலத்தில் உள்ள 7 கோடி பேருக்கு அடுத்த ஆண்டு ஜுன் மாதம் வரை இலவச ரேஷன் பொருள் வழங்க மே.வங்க அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளது.
‘’ இந்த ரேஷன் பொருட்கள் திருநங்கைகளுக்கும் வழங்கப்படும். குடும்ப அட்டை தயாராவதற்கு நாட்கள் பிடிக்கும் என்பதால், திருநங்கைகளுக்கு தற்காலிகமாக ’டோக்கன்’’ வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் இலவச ரேஷன் பொருள் வாங்க வகை செய்யப்படும் ‘’ என்று அறிவித்துள்ள மம்தா ‘’ விலைமாதர்கள் நலனையும் இந்த நேரத்தில் கருத்தில் கொண்டு,அவர்களுக்கும் இலவச ரேஷன் பொருள் போலீசார் மூலம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அறிவித்துள்ளார்.
-பா.பாரதி.