சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து, கடிதம் அனுப்பியது.

இதற்கு பதில் அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், மாணவர் விடுதிக்கு பதிலாக ஆடிட்டோரியத்தை தரத் தயார் என்று தெரிவித்து உள்ளது.

சென்னையில் கொரோனா  தொற்று நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 2115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்தம், 54,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக, மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உருவாகி வருகிறது.

இதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், திருமண மண்டபங்கள், சமுக நலக்கூடங்கள், சென்னை டிரேட் சென்டர் உள்பட பல பகுதிகளில் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  அண்ணா பல்கலைக்கழக  மாணவர்கள் விடுதி கட்டிடங்களையும் கொரோனா வார்டாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து, சென்னை மாநகராட்சி சார்பில் து,  அண்ணா பல்கலைக்கழகத்திற்கு  கடிதம் எழுதப்பட்டது.

இதற்கு பதில் அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம்,  மாணவர்கள் விடுதிக்குப் பதில், ஆடிட்டோரியத்தை தரத் தயார் என்றும் தெரிவித்து உள்ளது.

விடுதிகளில் மாணவர்களின் உடைகள், உடமைகள் இருப்பதால் கொரோனா சிகிச்சைக்காக விடுதியை தர முடியாது என்றும், ஆடிட்டோரியம் மற்றும் 300 படுக்கை வசதி உள்ள 2 புதிய கட்டடங்களை தர தயார் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.