“நான் நெதர்லாந்தை சேர்ந்தவன், இந்த இணையதளம் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய SQL முறையை கொண்டு உள்ளது. இதை அட்மினுக்கு தெரியப்படுத்தினேன். அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. எனவே இந்த டேட்டாபேசை தகர்த்துவிட்டேன்”
தென்னாப்பிரிக்காவுக்கான இந்திய தூதரகத்தின் இணையதளத்துக்கு நேர்ந்த கதி இது!

hacker

தென்னாப்பிரிக்காவுக்கான இந்திய தூதரகத்தோடு நில்லாமல் லிபியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, மாலாவி, மாலி மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதரக இணையதள டேட்டாபேஸ்களையும் தகர்த்துவிட்டார்கள் இந்த ஹேக்கர்கள்.
நெதர்லாந்தை சேர்ந்த Kapustkiy and Kasimierz L என்ற பெயரில் டுவிட்டர் கணக்கை பராமரித்து வருபவர்கள் மேற்கண்ட ஹேக்கிங் வேலையை செய்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் 7 நாடுகளுக்கான இந்திய தூதரக இணையதளங்களின் டேட்டாபேஸ்களை தகர்த்து அதன் விபரங்கள், ’அட்மின் மற்றும் லாகின்’ விபரங்கள், இமெயில் முகவரிகள், தொலைப்பேசி எண்கள், தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்களின் பாஸ்போர்ட் எண்கள் ஆகிய அனைத்தையும் பேஸ்ட்பின் டாட் காம் என்ற இணையதளத்தில் வெளியிட்டுவிட்டார்கள்.
அது மட்டுமன்றி இந்த ஹேக்கர்கள் தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் 161 இந்தியர்கள், சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 35 இந்தியர்கள், இத்தாலியில் வசிக்கும் 145 இந்தியர்கள், லிபியாவில் வசிக்கும் 305 இந்தியர்கள், மலாவியில் வசிக்கும் 74 இந்தியர்கள், மாலியில் வசிக்கும் 14 இந்தியர்கள் மற்றும் ரோமானியாவில் வசிக்கும் 42 இந்தியர்களின் தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த இணையதளங்கள் ஹேக்கர்களுக்கு எளிதில் இலக்காகும் தொழில்நுட்பதைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் 7 தூதரக இணையதளங்கள் பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்களால் தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்விவகாரம் சம்பந்தமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.