சென்னை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாஜகவின் வலையில் விஜயதாரணி சிக்க மாட்டார் என உறுதிப்படக் கூறி உள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் அப்போது உடன் இருந்தார்.
சட்டசபை வளாகத்தில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம்,
”தமிழகம் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. பேரிடர், கொரோனா எனப் பல கட்டங்களைக் கடந்து பல புதிய திட்டங்களால் தமிழகத்தை அரசு உயர்த்தி வருகிறது. இந்த நிதிநிலை சிறப்பானது. பாஜகவால் உண்மை பேச முடியாது. அவர்கள் பொய்தான் கூறுவார்கள். மத்திய அரசின் வீடு வசதி திட்டம் குளறுபடியானது. இதில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள்.
விஜயதாரணி 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் ஆவார். பாஜக என்றால் பிள்ளை பிடிக்கும் கட்சி. யார், யார் திறமையாக இருக்கிறார்களோ, விவரமாக இருக்கிறார்களோ அவர்களைப் பிடிக்கலாமா? என்று வலைவீசுவார்கள். அவர்கள் வீசும் வலைக்கு விஜயதாரணி நிச்சயம் சிக்க மாட்டார். ஏனெனில் அவர் புத்திசாலி.
தற்போது ஒரு வழக்கு சம்பந்தமாக, டில்லி போனதால் பாஜக தலைவர்கள் அவரை சேர்த்துக்கொள்ளலாமா? என்று துடிக்கிறார்கள். அது நடக்காது. அவருக்கு (விஜயதாரணி) காங்கிரஸ் கட்சி மீது எந்த அதிருப்தியும் இல்லை. காங்கிரஸ் கட்சி அவருக்கு நிறைய செய்துள்ளது. இன்னும் செய்யத் தயாராக இருக்கிறது” .
என்று கூறினார்.