சென்னை: சென்னை விக்டோரியா பொது அரங்கில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள் என்று வாழ்த்து தெரிவித்தார்.
அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை பார்க் டவுன் விக்டோரிய அரங்கில் அகில இந்திய குடிமைப் பணித்தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. “நான் முதல்வன்” திட்டத்தில் படித்த 60 மாணவர்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் 56 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இந்திய குடிமைப் பணித் தேர்வுக்கு பயிற்சி பெற டெல்லி செல்லும் நிலை இருந்தது. ஆனால், ‘நான் முதல்வன்’ திட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, டெல்லி சென்று படித்தவர்கள்கூட, தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர். டெல்லியின் தனியார் பயிற்சி நிலையங்களைவிட, சிறந்த பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.” என்று பேசினார்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,உலகிலேயே மிகவும் கடினமாக தேர்வு யு.பி.எஸ்.சி தேர்வுதான். “கடுமையான உழைப்பைக் கொடுத்து, உலகிலேயே கடினமான UPSC தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் அனைவருக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். நீங்கள் படைத்திருப்பது சாதாரண சாதனை அல்ல. தற்போது அதற்கான பலனைப் பெற்று வருகிறோம். இந்த ஆண்டு மட்டும் சுமார் 60 பேர் தமிழ்நாட்டிலிருந்து இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் கூட வேண்டும்.

தமிழ்நாட்டில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தது. அரசு எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க திராவிட மாடல் அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டது. நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் அரசு எடுத்த முன்னெடுப்புகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. உங்கள் கனவு நிறைவேறிவிட்டது; மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள். அதிகாரிகளாக பொறுப்பேற்றதும் சாமானிய மக்களிடம் அன்பாக இருங்கள். தமிழ்நாட்டில் இருந்து பல இளைஞர்கள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று எளிய மக்களுக்காக பணியாற்ற வேண்டும். நாடுகளுக்கு இடையிலான உறவையும் மேம்படுத்த வேண்டும்.”
அதிகாரிகள் என்றாலே அதட்டலுடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சாதாரண மக்களுடன் அன்பாகவும், பண்பாகவும் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும். எவ்வளவு பிசியாக இருந்தாலும் பெற்றோருடன் 5 நிமிடமாவது பேச வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]