டில்லி

க்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட மனித பரிசோதனை நடத்த சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுக்குள் கொண்டு வரத் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பல உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.   இதில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் கண்டு பிடித்த தடுப்பூசி சோதனை அளவில் முன்னணியில் உள்ளது.   இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் இந்த தடுப்பூசி மருந்துக்கு கோவிஷீல்ட் எனப் பெயர் இட்டுள்ளது.  இந்த மருந்தின் இண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மனித சோதனை இந்தியாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ சோதனை ஏற்கனவே நடந்துள்ளது.  அதையொட்டி இந்தியாவில் மேற்கொண்டு சோதனைகள் நடத்த நிறுவனம் அனுமதி கோரி இருந்தது.

இந்த சோதனையில் முதல் டோஸ் மருந்து சோதனையின் முதல் நாள் செலுத்தப்பட உள்ளது.   அதன் பிறகு 4 வாரங்கள் கழிந்து அதாவது 29 ஆம் நாள் இரண்டாம் டோஸ் செலுத்தப்பட உள்ளது.  குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊசி செலுத்தப்பட்டோர் உடல் நிலை கண்காணிக்கப்பட உள்ளது.    இதற்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யபட்டுள்தாக கூறப்படுகிறது.

இவற்றை இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி விஜி சோமானி நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் மருந்தின் முந்தைய சோதனை விவரங்கள் மற்றும் தற்போது சோதனை முறைகளை ஆய்வு செய்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் மேற்கொண்டு சோதனைகளைத் தொடர அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி 17 இடங்களில் இந்த சோதனை நடைபெற உள்ளன். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட 1600 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.  இந்த சோதனை, டில்லி எய்ம்ஸ், புனே பி ஜே மருத்துவக்கல்லூரி, பாட்னா ராஜெந்திரா மெமோரியல் ஆய்வுக் கழகம், சண்டிகர் பட்ட மேற்படிப்பு இயக்ககம், ஜோத்பூர் எய்ம்ஸ், கோரக்பூர் நேரு மருத்துவமனை, விசாக பட்டினம் ஆந்திரா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 17 இடங்களில் நடைபெற உள்ளது.