நாட்டின் 68வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதிலும் கோலகலமாக கொண்டாடப்பட்டது.   இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும்வகையில் உல்பா தீவிரவாதிகள்  பயங்ரவாத செயல்களில் ஈடுபட்டனர்.

பலத்த பாதுகாப்பையும் மீறி குடியரசு தின நாளான நேற்று அம்மாநிலத்தில் தொடர் குண்டுவெடிப்பை தீவிரவாதிகள் நிகழ்த்தினர்.  சராரிடோவ், ஷிப்சாகர், திப்புருகார்க், டின் சுகியா ஆகிய மாவட்டங்களில்  ஏழு  இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

அசாம் மாநிலத்தின் சராரிடோவ் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள நசிரா பகுதியில் உள்ள அஸ்ஸாம் ஓ.என்.ஜி.சி. தலைமை அலுவலகத்தில் காலை 8.20 மணியளவில் முதல் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. பின்னர் அடுத்த மூன்று வெடிகுண்டுகள் இருபது நிமிட இடைவேளைக்குப் பிறகு நசிரா, ஷிப்சாகர், திப்புருகார்க் ஆகிய மூன்று பகுதியில் வெடித்தன.

ஆறாவது வெடிகுண்டுச் சம்பவம் திப்ருகார் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா இடத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் நிகழ்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, டின் சுகியா மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் மேம்பாலத்தின்மேல் ஒரு வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உல்பா தீவிரவாதிகளே காரணம் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.