சென்னை:
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
நாங்குனேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக நாங்குனேரி தொகுதி காலியாக இருப்பபதாக அறிவிக்கப்பட்டது.
அதுபோல, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ., ராதாமணி உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானார். இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த இரு தொகுதிகளுக்கும், வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுடன் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், அப்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.