சென்னை: தமிழக முதல்வராகப் பதவியேற்றிருக்கும் தவெக தலைவர்  விஜய்யின் வீடு அமைந்திருக்கும் நீலாங்கரையிலிருந்து தலைமைச் செயலகம் வரும் வழியில் தனிப்பாதை அமைத்து  போக்குவரத்து காவல்துறை  நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மற்ற வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வராக பதவி ஏற்றுள்ள விஜய்-ன் வீடு திருவான்மியூரை அடுத்த நீலாங்கரையில் உள்ளது. இந்த வழியானது எப்போதும் வாகன நெரிசல் உள்ள பகுதியாகும். அதனால், இந்த வழியாக விஜய் வரும்போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முதல்வருடன் வரும் கான்வாய் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் காரணமாக, போக்குவரத்தை நிறுத்தி வைத்து, வழிவிடும் நிலையில் உள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து  முதல்வரின் வாகன அணி வருவதற்கு தனி வழி ஏற்படுத்தி போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்திருக்கிறது. நீலாங்கரையிலிருந்து, தலைமைச் செயலகம் வரும் வழி முழுக்க விஜய்யின் வாகனம் மற்றும் வாகன அணி வரும்போது, சாலையில் ஒரு பகுதியை மட்டும் முக்கோண தடுப்புகள் அமைக்கப்பட்டு, பிரித்துவிடுகிறார்கள்.இதனால், ஒரு பகுதியில் முதல்வர் மற்றும் அவருடன் வரும் வாகன அணி எந்த தங்கு தடையும் இன்றி பயணிக்கும்.

அதே சாலையின் மற்றொரு பக்கத்தில் பொதுமக்கள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இருந்தாலும்,   முதல்வர் விஜய் வருகையின்போது, பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இதையடுத்து, பொதுமக்களின் வசதிக்காக, முதல்வர் விஜய், அடையாறு  பசுமை வழிச்சாலையில் உள்ள அரசு பங்களாவிற்கு சென்று, அங்கிருந்து தலைமைச் செயலகம் வந்து சென்றால், திருவான்மியூர், அடையாறு , நீலாங்கரை பகுதி  பகுதி மக்களின்  வாகன நெரிசல் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் என சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நீலாங்கரையிலிருந்து தலைமைச் செயலகத்துக்கு 17 கிலோ மீட்டர் பயணம். வழி நெடுக காவல்துறை பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றைத் தவிர்க்க, தலைமைச் செயலகம் அருகே முதல்வருக்கு அரசு இல்லம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]