மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேச கட்சி விலகியிருப்பதை அடுத்து, தென்னிந்தியாவை தனி நாடாக்க போராட வேண்டியிருக்கும் என்ற அக்கட்சி எம்.பி.யின் பேச்சு கவனம் பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி ராஜமுந்திரியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பியும் நடிகருமான முரளி மோகன் பேசினார். அப்போது அவர், “ மாநிலங்களுக்கான உரிமைகளை சலுகைகளை அளிக்கும் விசயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டே செயல்படுகிறது. இது தொடர்ந்தால் தெற்கில் இருக்கும் ஐந்து மாநிலங்களும் தனியாகப் பிரிந்து தனிநாடு கோரிக்கையை முன் வைத்துப் போராட வேண்டிய நிலையை மத்திய அரசே ஊக்குவித்ததாக ஆகிவிடும். தென்னக மாநிலங்கள் சலுகை விஷயத்தில் மத்திய அரசு தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று பேசி இருந்தார்.
இவரது பேச்சு அப்போது பெரிய விளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் சமீபத்தில் தெலுங்கு தேச எம்பிக்கள் இருவர் தங்களது பதவியை ராஜினாமா செய்த விவகாரத்திற்குப் பிறகு கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடந்துவருகின்றன.