சென்னை: கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு உள்ளதாகவும், மின்சாரம் நிறுத்தப்பட்டது, உள்பட பல்வேறு அசம்பாவிங்களுக்கு திமுகவே காரணம் என குற்றம் சாட்டியும், சிபிஐ விசாரணை கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27ந்தேதி அன்று கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அவருக்கு பிரசாரத்துக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அலைகடலென கூடிய கூட்டத்தில், விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 88 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கரூர் சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மாநிலஅரசின் சார்பில் தலா ரூ.10லட்சமும், தவெக தரப்பில் தலா ரூ.20 லட்சமும், மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும், கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கரூரில் ஏற்பட்ட அசம்பாவிதத்துக்கு காரணம், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் காவல்துறை நடத்திய தடியேடியே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுகவைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மருத்துவமனையில் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். சனிக்கிழமை கரூரில், செந்தில் பாலாஜி பற்றி விஜய் பேசிய போதுதான், கற்கள், செருப்புகள் வீசப்பட்டு மின்சாரம் பாதிக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்தன. கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியிருக்கிறார்கள். சம்பவத்துக்கு காரணமாக செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.