டெல்லி: செந்தில் பாலாஜி வழக்கில் தமிழ்நாடுஅரசு பதில் அளிக்க விலை. நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானது குறித்து கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இதுகுறித்து தமிழ்நாடு அரசு, செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்க அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், வழக்கு டிசம்பர் 20ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக  தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை என வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற  நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற புகாரில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக குற்றஞ்சாட்டிய அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூனில் கைது செய்தது. ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். பலகட்ட விசாரணைக்கு பின், உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு உடனே முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பதவி வழங்கினார். அவருடன் உடனே அமைச்சராக பதவி ஏற்றார். இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

அதன் பின், அவர் அமைச்சராக பதவியேற்றார். ‘குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதால், சாட்சியங்கள் அச்சத்தில் உள்ளனர். இது வழக்கின் விசாரணையை பாதிக்கக்கூடும். எனவே, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும்’ எனக்கூறி, வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ‘செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பதால், விசாரணையில் சிக்கல்கள் எழலாம்’ என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மற்றும் அமலாக்கத் துறையினர் தங்களது மனுக்களில் குறிப்பிட்ட விஷயங்களை பரிசீலித்த நீதிபதிகள், ‘செந்தில் பாலாஜி, அமைச்சராக பொறுப்பேற்று கொண்டதால், சாட்சியங்கள் என்ன மாதிரியான மனநிலைக்கு ஆளாகி இருப்பர் என்பதை கூர்ந்து கவனித்து வருகிறோம்’ என்றனர்.

இந்த வழக்கில்,  கடந்த முறை பதில் சொல்கிறோம் என்று கூறியதால் நோட்டீஸ் அனுப்பவில்லை. தற்போது வரை தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை.

செந்தில் பாலாஜிக்கு நிவாரணம் வழங்குவதா இல்லையா என்பது தனிப்பட்ட விஷயம். இந்த மோசடியில் எத்தனை சாட்சிகள் உள்ளனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கில், சாட்சியங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பட்டியலை அளிக்க தமிழக அரசுக்கு உத்தர விட்டனர். வழக்கில் உள்துறை செயலாளரை ஒரு எதிர் மனு தாரராக இணைத்து நோட்டீஸ் பிறப்பித்து, பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.