ஷாஜஹான்பூர்:
தலித் சிறுவனை அறைந்த குற்றத்திற்காக, 22 வருடங்களுக்குப் பிறகு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ளது சத்வா புஜூர்ஜ் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த ஹிமான்ஷூ ஷுக்லா(9) என்ற சிறுவன், அதே பகுதியை சேர்ந்த கல்லு(9) என்ற தலித் சிறுவனை அறைந்துள்ளார்.
இது நடந்தது கடந்த 1995ஆம் ஆண்டு. இதற்காக எஸ்.சி./எஸ்.டி சட்டப்பிரிவின் கீழ், ஹிமான்ஷூ ஷுக்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அன்று இரவில் கைது செய்யப்பட்டு, மறுநாள் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே ஹிமான்ஷூ ஷுக்லா கடந்த 2005ல் திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளை பெற்றுள்ளார். இந்நிலையில் 2011ல் குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 15 ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், அரசின் சுகாதார மையம் ஒன்றில் ஒருமாத காலத்திற்கு துப்புரவு பணி செய்ய உத்தரவிடப்பட்டது. ஹிமான்ஷூ ஷுக்லா விற்கு தற்போது 31 வயதாகிறது. அவர், ” அந்த சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. எதற்காக அறைந்தேன் என தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அரசின் சுகாதார மையத்தில் காலை 10 மணி முதல் 2 மணி வரை துப்புரவு பணி செய்து வருகிறார். “நான் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தேன். தற்போது பகல் முழுதும் இங்கு துப்புரவு பணி செய்வதால் கூலி வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் என் குடும்பம் பட்டியினில் தவிக்கிறது” என்று வேதனையுடன் சொல்கிறார் ஹிமான்ஷூ .