இந்திய அணியில் விராத் கோலி உள்ளிட்ட பல சீனியர் வீரர்கள் விலகிய நிலையில், இதுதொடர்பாக பலர் கவலை தெரிவித்த நிலையில், சிலரோ, இது புதியவர்களுக்கான வாய்ப்பு என்று அதை நேர்மறையாகப் பார்த்தனர்.
ஆனால், அந்த சிலரின் நேர்மறைப் பார்வைதான் இப்போது உண்மையாகியுள்ளது.
போராட்டம் என்று வருகையில், அங்கு அனைத்தையும்விட மன தைரியம்தான் மிக மிக பிரதானமானது. அந்த தைரியத்தைதான் இந்தியாவின் டி-20 ஸ்டைல் ஜூனியர் வீரர்கள் வெளிப்படுத்தி, பழைய நினைப்பில் இருந்த ஆஸ்திரேலிய அணியை களங்கடித்து விட்டனர்.
இந்த டெஸ்ட் தொடர், இந்திய சீனியர் வீரர்களுக்கு ஒரு பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அவர்கள் இனிமேல் இஷ்டத்திற்கு ஆடமுடியாது. அவர்களுக்கான இடம் விரைவில் பறிபோய்விடும். ஏனெனில், டெஸ்ட் போட்டியில் புதிய எழுச்சியைக் கொண்டுவந்துள்ளனர் இந்தியாவின் இளம் வீரர்கள். எனவே, சீனியர் வீரர்கள் யாரேனும் தங்களின் மோசமான செயல்பாடுகளால் ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகத்தை கடுப்பேற்றினால், அவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தொடரில், முகமது ஷமி, மயங்க் அகர்வால், ரோகித் ஷர்மா உள்ளிட்ட சில சீனியர் வீரர்களின் செயல்பாடுகள், மெச்சத்தக்கதாக இல்லைதான்.
இனிவரும் நாட்களில், எந்தவகை கிரிக்கெட்டாக இருந்தாலும், மூத்த வீரர்கள் காயமடைந்தாலோ அல்லது அவர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலோ, மாற்றாக களமிறங்கி கலக்குவதற்கு ஆட்களுக்குப் பஞ்சமில்லை என்பதே உண்மை.