மூத்த பத்திரிகையாளர் எம். பி. திருஞானம் உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று காலை 11 மணி அளவில் போரூர் மின் மயானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் இணைச் செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ் இதழியல் உலகில் நீண்ட வரலாறு படைத்தவர் மூத்த பத்திரிகையாளர் பெரியவர் எம். பி. திருஞானம்.தமிழக அரசியல் மாற்றங்களை தனது எழுத்தால் பதிவு செய்தவர்.சில பெரும் அரசியல் மாற்றங்களில் முக்கியப் பங்கும் வகித்தவர்.காங்கிரஸ் கட்சியில் காமராஜர், ஈ.வெ.கி. சம்பத்,பக்தவச்சலம், நெடுமாறன் ஆகிய பல தலைவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தவர். மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி கூ இராமமூர்த்தி அவர்களின் இதயம் கவர்ந்தவர். எம். பி. திருஞானம் அவர்களைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் காலமானார் …
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெரியவர் திரு.எம்.பி திருஞானம் அவர்கள் இன்று08-07-2020 புதன்கிழமை மாலை 6 மணியளவில் இயற்கை எய்தினார் .அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
நம்மை விட்டு மறைந்த மூத்த பத்திரிகையாளர் எம். பி. திருஞானம் தனது முக நூலில் 22-11-2019 அன்று எழுதிய பதிவை அவர் நினைவாக இங்கு மீள் பதிவு செய்கின்றோம்.
வணக்கம்,
நண்பர்களே…
●
முதுமை நோய்களின்
கூட்டணி தாக்குதல்
காரணமாக,
எனக்கு பேச்சு
வரவில்லை !
●
தீவிர சிகிகிச்சையில்
இருக்கிறேன் !
எனவே,
இந்த
இதழோடு,
எனது
“நெற்றிக்கண்”
பயணம்,
இனிதே
முடிகிறது !
●
ஆசிரியர்
ஏ. எஸ். மணி,
எப்போதும்
என் நன்றிக்கு
உரியவர் !
●
மக்களின் பாராட்டில்
மிதந்த ‘தராசு’
புலனாய்வு வார இதழில்,
1989 ஜனவரி 27 அன்று,
பணியில் சேர்ந்தேன் !
“ஸ்டாலின் வருகிறார்
பராக் ! பராக் !”
என்ற தலைப்பில்,
எனது எழுதுப்பணி,
இனிதே துவங்கியது !
அன்றைய தினம்தான்,
கலைஞர்
வள்ளுவர் கோட்டத்தில்
முதல்வர் பொறுப்பை
ஏற்றார் !
●
ஆசிரியர்
அண்ணன் ஷ்யாம்,
என்னுள் உறங்கிக்
கொண்டிருந்த
திறமையை,
கண்டுபிடுத்து,
தட்டிக் கொடுத்து,
பளபளக்க
வைத்தார் !
நிறைய சுதந்திரமும்
கொடுத்தார் !
செல்வமும்
கொடுத்தார் !
●
தம்பி ஏ. எஸ். மணிதான்,
அண்ணன் ஷ்யாமை
எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் !
அவருக்கு
எனது நன்றி !
●
தம்பி ஏ. எஸ். மணியின்
நெற்றிக்கண் இதழ்
துவங்கிய
1995 ஏப்ரல் துவங்கி,
நேற்று வரை,
இணை ஆசிரியராக
பணி செய்தேன் !
நடப்பு இதழில்,
” ஸ்டாலின் மிசா
கைதிதானா ? ”
என்ற தலைப்பில்,
Cover Story
மன நிறைவாக
எழுதியுள்ளேன் !
●
ஸ்டாலினில்
துவங்கிய எனது
Cover Story பயணம்,
ஸ்டாலினியிலேயே
முடிந்துள்ள விஷயம்,
எனக்கு வியப்பாக
இருக்கிறது !
●
இடையில் ஒரு ஆண்டு,
மட்டும் – என்னோட
‘ஏவுகணை’ வார இதழ்
பணிக்காக
‘நெற்றிக்கண்’
இதழில் விடுப்பு
எடுத்தேன் !
●
நெற்றிக்கண்ணில்
சற்றேறக் குறைய
23 ஆண்டுகள்
பயணம் செய்ததில்,
மெத்த மகிழ்ச்சி !
●
அண்ணன் ஷ்யாமின்
‘தராசு’,
மு.க.ஸ்டாலினின்
‘இளைய சூரியன்’,
Dr. ராமதாசின்
‘மக்கள் முரசு’,
எனது
‘ஏவுகணை’
தம்பி மணியின்
‘நெற்றிக்கண்’
எல்லாமாக
1500 அட்டைப்பட
கட்டுரைகளை
எழுதியுள்ளேன் !
பரபரப்பு மிக்க
பெட்டிச் செய்திகள்
1000 இருக்கும் !
●
அன்புடன்,
‘ஜவஹர்லால்‘
என்ற
புனைப் பெயரில்
உங்களிடம்
* உலா வந்த,
எம். பி. திருஞானம்.
●
ஆழ்ந்த துயரங்களுடன்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்