காந்திநகர்

ஏ எஸ் அதிகாரிகளுக்கான  வாட்ஸ்அப் குழுவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி தனது நிர்வாணப்படத்தை வெளியிட்டது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது

குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவது அனைவரும் அறிந்ததே.   ஆனால் அதை விட வேகமாக ஒரு மூத்த ஓய்வு பெற்ற அதிகாரியின் செயல் குறித்த விமர்சனங்கள் பரவி சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.   தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஆண் மற்றும் பெண் ஐ ஏ எஸ் அதிகாரிகள் இணைந்து ஒரு வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கி உள்ளனர்.   இந்தக் குழு அதிகாரிகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்துக்காக மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் உள்ள ஒரு மூத்த ஓய்வு பெற்ற அதிகாரி வியாழன் இரவு தனது நிர்வாணப் படங்களையும் வேறு சில ஆபாசமான படங்களையும் பகிர்ந்துள்ளார்.  இதைக் கண்ட குழு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  படங்களைப் பகிர்ந்த அதிகாரி அரசில் பல முக்கியமான பதவிகளில் இருந்தவர் ஆவார்.  இதையொட்டி குழுவில் விவாதங்கள் நடந்ததால் அவர் அந்த பதிவுகளை நீக்கி விட்டார்.

அதற்கு முன்பே அனைத்து குழு உறுப்பினர்களும் அதைப் பார்த்து விட்டனர்.  இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.    குழுவில் உள்ள பெண் உறுப்பினர்கள் அவரை குழுவை விட்டு விலக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.    இதற்கு ஆண் உறுப்பினர்களும் ஆமோதித்துள்ளனர்.   இந்த தகவல் குஜராத் அரசு தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுக்கிடையில் பேசப்பட்டது.  இந்த பதிவை அந்த அதிகாரி யாருக்காகவோ வெளியிட்டுள்ளார் எனவும் பேசப்பட்டுள்ளது.

இந்த பதிவு விவரங்கள் குறித்து ஐ ஏ எஸ் அதிகாரிகள் குஜராத் முதல்வர் அலுவலகத்துக்குப் புகார் அளித்துள்ளதாகவும் ஆனால் முதல்வர் அலுவலகத்தில் இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.   இந்தக் குழுவில் உள்ள குஜராத் மாநில ஐ ஏ எஸ் அதிகாரிகளில் சிலர் மத்திய அரசில் முக்கிய பதவிகளில் உள்ளனர்.  அவர்களில் சிலரும் ஒரு ஓய்வு பெற்ற தலைமைச் செயலரும் இது குறித்து அதிகாரிக்குக் குழுவில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.