டில்லி

ச்ச நீதி மன்றத்தின் விடுமுறை நாட்களை குறைத்து, வேலை நாட்களில் மாலை 4 மணி வரை வேலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்துக்கு மூத்த வழக்கறிஞர் யதின் ஓஜா கடிதம் எழுது உள்ளார்.

டில்லியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் யதின் ஓஜா தலைமை நீதிபதி கேஹருக்கு நீதிமன்ற விடுமுறைகள் மற்றும் வேலை நேரம் பற்றி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :

”மக்களில் பலருக்கு நமது உச்சநீதிமன்றம் வருடத்தில் 191 நாட்கள் மட்டுமே இயங்குகிறது என்றும் 174 நாட்கள் மூடப்பட்டுள்ளது எனவும் தெரியாது.  மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே, சென்ற வருட நாட்காட்டியை பார்த்தால் நான் சொல்வது உண்மை என புரியும்.

கடந்த 2016ஆம் வருடம் ராமநவமி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் வேலைநாட்களாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் கடைசி நிமிடத்தில் அவை இரண்டும் விடுமுறை நாட்கள் என மாற்றப்பட்டது.  இது 15-20 வருடங்களாக வேலை நாட்கள் என அறிவிக்கப்பட்டு, கடைசி நிமிடத்தில் மாற்றப்படுகின்றது.

மற்றொரு மன்னிக்க முடியாத குழறுபடி பக்ரீத், ரம்ஜான், ஈத் உல் ஃபிதர் ஆகிய நாட்களுக்கான விடுமுறை.  முதலில் அறிவிக்கப்பட்ட விடுமுறை தினத்தை தவிர பிறையைப் பார்த்த பின் மறுபடியும் இன்னொரு விடுமுறை அளிக்கப்படுகிறது.  அதே நேரத்தில் முதலில் அறிவித்த விடுமுறை தினத்தை வேலை நாளாக மாற்றுவது கிடையாது. அதாவது ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.

நீதிமன்ற வேலை நேரம் காலை 10.30 முதல் மாலை 4.30 வரை (ஒரு மணி நேர உணவு இடைவேளையுடன்) என்பது ஏட்டில் மட்டுமே உள்ளது.  ஒவ்வொரு திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் நீதிமன்றம் மதியம் ஒரு மணிக்கே மூடப்பட்டு விடுகிறது.  நீதிபதிகளும் வீட்டுக்கு சென்று விடுகின்றனர்.  இது பற்றி இதுவரை பொதுமக்களோ அல்லது எந்த ஒரு மீடியாவோ வாயைக் கூட திறக்கவில்லை.  ஏன் நீதிபதிகள் வழக்கு விவாதம் முடிந்த உடன் வீட்டுக்கு கிளம்புகிறார்கள்?  வேறு ஏதும் வேலைகளை தங்கள் சேம்பரில் அமர்ந்து பார்த்து விட்டு வேலை நேரம் முடிந்த பிறகு கிளம்பக்கூடாதா?  திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதியம் நீதிமன்றம் ஏன் இயங்கக் கூடாது?   மாவட்ட மற்றும் வெளியூர் நீதிமன்றங்கள் 7 மணி நேரம் இயங்கும் போது உச்சநீதிமன்றம் நான்கரை மணி நேரம் மட்டுமே இயங்குவது சரியா?

ஒவ்வொரு வருடமும் டில்லியில் பிரதமர், சட்ட அமைச்சர், மாநிலங்களின் முதல்வர்கள், உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் ஆகியோர் கூடி அனைத்து வழக்குகளையும் தாமதமின்றி முடிக்க வேண்டும் எனப் பேசுகிறார்கள்.  ஆனால் எந்த ஒரு நீதிபதியும் சுய பரிசோதனை செய்துக் கொள்வதில்லை என்றுதான் சொல்வேன்.

மேலே கூறியதில் எதை உங்களால் செய்ய முடியவில்லை என்றாலும், நான்கு மணி வரை வேலை செய்யவேண்டும் என்னும் விதிமுறையையாவது பின்பற்றினால் எத்தனையோ ஏழை மக்களுக்கு நீதி குறித்த நேரத்தில் கிடைக்கும்.” என கடிதம் எழுதியுள்ளார் யதின் ஓஜா.

ஊதுகிற சங்கை ஊதினால் விடியும் போது விடியும் என்பது பழமொழி.  சங்கை ஓஜா ஊதி விட்டார். எப்போது விடியும் என்பதுதான் தெரியவில்லை.