சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், அது பற்றிய  செய்தியாளரின்  கேள்விக்கு,  பதில் கூறிய எடப்பாடி பழனிச்சமி, அதை  அவரிடமே கேளுங்கள் என கடுப்படித்தார்.

அதேவேளையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்திருப்பது தற்கொலைக்கு சமம்  முன்னாள் அதிமுக அமைச்சர்  செம்மலை விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது தமிழக அரசியலில் இன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது . பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற எளிய விழாவில் செங்கோட்டையனும் அவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் தவெக  உறுதிமொழியை  ஏற்று  இன்று கட்சியில் இணைந்தனர். இதையடுத்து அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

அதாவது,  செங்கோட்டையனுக்கு நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தரப்பட்டது. ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக,  செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும்  இடை ஏற்பட்ட மனக்கசப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. முதலில்  அதிமுகவில்  இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதனை செங்கோட்டையன் ரசிக்கவில்லை. இதுதான் பிரச்சனைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் நியமனத்தில் கருத்து மோதல், அவரது சொந்த தொகுதியில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது என பல்வேறு விஷயங்களில் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் குரல் எழுப்பினார். மேலும் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியின் போது, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இதனால் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்ததுடன், அவரை கட்சியை விட்டு நீக்கியும் அதிரடி காட்டினார் எடப்பாடி பழனிசாமி. இதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மவுனம் காத்து வந்த செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தன்னை த.வெ.கவில் இணைத்து கொண்டார்.

முன்னதாக,   சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த அவர், அதே நாள் மாலை பட்டினப்பாக்கத்தில் விஜய்யை சுமார் இரண்டு மணி நேரம் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இன்று முறையாக இணைப்பு நிகழ்வு நடைபெற்றது

இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரிடம்  செங்கோட்டையன் த.வெ.கவில் அ இணைந்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது அதற்கு செங்கோட்டையன் இணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அவரிடமே கேளுங்கள்” என கோபமாக பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, இழப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

இதற்கிடையில், செங்கோட்டையன் தவெக இணைப்பு குறித்து கருத்து தெரிவித்த  மூத்த அதிமுக முன்னாள் அமைச்சர்  செம்மலை,  செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்திருப்பது தற்கொலைக்கு சமமான முடிவு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததால் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.

கண்களை இமை காப்பது போல் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி காத்து வருகிறார் என்றவர்,   தலைமைக்கே சவால் விடும் செங்கோட்டையன் போன்ற நபர்கள் இருக்கும் வரை கட்சியில் குழப்பம்தான் நீடிக்கும். பழுத்த இலை விழுவதால் மரத்திற்கு எந்த சேதமும் இல்லை. செங்கோட்டையன் சென்றதால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பில்லை என்றவர், விஜய், செங்கோட்டையன் இருவரில் யார் யாருக்கு அரசியல் பாடம் எடுக்கப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். என்றார்.

 

செங்கோட்டையன் தவெகவிற்கு சென்றுள்ளதால், கொங்கு பகுதியில் அதிமுகவின் அடித்தளம் பலவீனமடைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.  இது பாஜகவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.