ஐதராபாத்: செம்மரக் கடத்தல் மன்னன் ஆந்திர போலீசாரால் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
ஆந்திர வனத்துறைக்கு சொந்தமான காடுகளில் உள்ள செம்மரங்கள் வெட்டி கடத்தப்படும் நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்த மரங்களை வெட்டி கடத்தும் பணியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனால், பல தமிழர்கள் ஆந்திரமாநில காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கும் பலியாகி உள்ளனர்.
கடந்த மே மாதம் 10ந்தேதி சித்தூர் மாவட்டம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்கிற சேட்டு (வயது 44), முருகேசன் என்கிற ஞானபிரகாசம் (50), பெருமாள் வெங்கடேஷ் (44), கரியா ராமன் (27), குலஞ்ஜன்(36), வெங்கடேஷ்(37), கோவிந்தராஜ் (21) ஆகியோரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.3 கோடி மதிப்புள்ள 2720 கிலோ எடை கொண்ட 89 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், இன்று ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கார்களில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக செம்மரக்கட்டைகளை கடத்திக்கொண்டு சென்ற வேலூர் மாவட்டம் கணியம்பாடி சேர்ந்த பெருமாள் மற்றும் வேலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பெருமாள் செம்மர கடத்தல் மன்னன் என்று கூறப்படுகிறது. இந்த சோதனையின்போது, மற்றும் பலர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.