சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளால், ஏரியின் நீர் மட்டம் 22அடியை கடந்து முழு கொள்ளவை எட்டும் நிலைக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக, ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை 1500 கனஅடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிகரித்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் தற்போது 11 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி வருகிறது. இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் எச்சரிக்கை யாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும் 150 கிமீ வேகத்தில் காற்றும் கனத்த மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புயல் காரணமாக கடந்தஇரு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 22 அடியை தாண்டி உள்ளது. அதன் முழு கொள்ளளவான 24 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்று மதியம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடையாறு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்வதால் குடியிருப்புகக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.