சென்னை

மோடி தேர்தல் தோல்வி பயத்தால் நாகரீகமற்று பேசுவதாகத் தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். 

நேற்று சென்னை விமான நிலையத்தில் தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம், 

”காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் கடந்த முறை 4.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை 5½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இருக்கிறார். 

மக்களைப் பிரித்தாளும் கொள்கையில் மோடி இறங்கி இருக்கிறார். பாஜக 100 இடங்களில்கூட வெற்றி பெறாது என வடநாடு பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

எனவே தோல்வி பயத்தால் கலவரத்தை ஏற்படுத்தவும், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தவும் மோடி இதுபோல் நாகரிகமற்ற முறையில் பேசி வருகிறார். தமிழக காங்கிரஸ் இதை வன்மையாகக் கண்டிக்கிறது. 

மக்களை நம்பி இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி தேர்தலில் நிற்கும் போது மோடி, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரி, தேர்தல் ஆணையம் ஆகியவற்றை நம்பி தேர்தலில் நிற்கிறார்.” 

என்று தெரிவித்துள்ளார்.